காதலியை கத்தியால் குத்திய காதலனுக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: காதலி மீது சந்தேகம் ஏற்பட்டதால் கத்தியால் குத்திய காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொளத்தூர் பட்மேடு ஜி.கே.எம்.காலனியை சேர்ந்தவர் சரவணன் (27). இவர் ஆயிரம்விளக்கு ஸ்ரீராம்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதே நிறுவனத்தில் அமைந்தகரையை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும் வேலை செய்து வந்தார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.  

இந்நிலையில் அந்த பெண், வேறு சிலருடன் நெருக்கமாக பேசுவதாக சந்தேகமடைந்த சரவணன், அவரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண்ணை சரவணன் தாக்கி உள்ளார். தொடர்ந்து அந்த பெண், திருவண்ணாமலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். 2 வாரங்களுக்கு பின்பு மீண்டும் சென்னை வந்த அந்த பெண், 7.5.2014 அன்று மொபட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சரவணன், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயமடைந்த இளம்பெண்ணை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எல்.லேகா கொலை முயற்சி வழக்கில் கொடுங்காயம் ஏற்படுத்தினால் அதிகபட்ச தண்டனையான ஆயுள்தண்டனை வரை வழங்கலாம் என சட்டத்தில் உள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடலின் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியதில் கொடுங்காயம் ஏற்பட்டது. எனவே, குற்றம் சாட்டப்பட்டுள்ள சரவணனுக்கு அதிகபட்ச தண்டனையான ஆயுள்தண்டனை வழங்க வேண்டும்’ என்று வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, சரவணன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு அதிகபட்ச தண்டனையான ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories: