கொரோனா பரவலை சமாளிக்க மத்திய அரசு செய்ய வேண்டிய 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்!

டெல்லி: நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த யோசனைகளை கூறி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா முதல் அலையின் போது, உருமாற்ற வைரஸ் பற்றி எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் இருந்தது. கொரோனா வைரசை வைத்து பல நிறுவனங்கள் தடுப்பூசியை தயாரித்து பயன்பாட்டில் கொண்டு வந்துள்ளன. இந்நிலையில், கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக உள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற நிலை உள்ளது. தினசரி பலி மீண்டும் ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்த அபாயகரமான சூழலில் நமக்குள்ள ஒரே பாதுகாப்பு தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே என்பது சமானியர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த யோசனைகளை கூறி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில்; கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையை விரிவுப்படுத்த மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதாவது; அடுத்த 6 மாதங்களுக்கு எவ்வளவு தடுப்பூசி கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களுக்கு எந்தெந்த முறையில் தடுப்பூசி மருந்தை மத்திய அரசு விநியோகம் செய்ய உள்ளது? எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை விட எத்தனை % பேருக்கு போடப்பட்டுள்ளது என்பதே முக்கியம்.

மாநிலங்களுக்கு தடுப்பூசி மருந்தை அனுப்பியது போக மத்திய அரசிடம் அவசியத் தேவைக்கு 10% மருந்து இருக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி முடிவெடுக்க மாநிலங்களுக்கு அனுமதி தேவை. ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர் போன்றவர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி மாநிலங்கள் முடிவு செய்ய அனுமதிக்கலாம். தடுப்பூசி உற்பத்தித் திறனை நிறுவனங்கள் அதிகரிக்க தேவையான உதவிகளை மத்திய அரசு அளிக்க வேண்டும். மேலும் பல நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உரிமம் வழங்க வேண்டிய நேரம் இது. ஏற்கனவே இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசியை பல நிறுவனங்கள் தயாரிக்கும் வகையில் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

நம்பகமான அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு தடுப்பூசிகளையும் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்திக்கு மேலதிகமாகத் தேவைப்படும் கொரோனா தடுப்பூசி மருந்தை இறக்குமதி செய்யலாம். ஐரோப்பிய மருத்துவ முகாமை, அமெரிக்க மருந்துகள் ஆணையம் போன்றவற்றால் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: