கொரோனா 2வது அலை பரவல் எதிரொலி: திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் மூடல்

மாமல்லபுரம்: கொரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் உள்ள நித்யகல்யாணப் பெருமாள் கோயில் மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை மூடி இருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று 2வது அலை பரவல் அச்சம் காரணமாக, மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் வரலாற்று நினைவுச் சின்னங்கள், சுற்றுலா தலங்களை மத்திய அரசு மூட உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்தை மூடி தொல்லியல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், மே 15ந் தேதி வரை பார்வையாளர்கள் கண்டுகளிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களையும் மூடி, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் உள்ள நித்யகல்யாணப் பெருமாள் கோயில் நுழைவு வாயிலில் அறிவிப்பு விளம்பரம் வைக்கப்பட்டு, கோவில் மூடப்பட்டது. இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் பூமாலை அணிந்து எதிரே உள்ள மண்டபத்தை சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

அதேநேரம், கோவில் ஆகமவிதிப்படி, தினமும் நான்கு கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும், மறு அறிவிப்பு வரும் வரை கோயில் மூடி இருக்கும் எனவும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Related Stories:

>