மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேக வாகனங்களால் அடிக்கடி விபத்து

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் (இசிஆர்) செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிலும், இருசக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு கார்களை அதிகமாக பார்க்க முடிகிறது. அவை அதிவேகமாக செல்கின்றன.  ஆனால்,  சாலை அதற்கேற்ற வகையில் தரமானதாக இல்லை. ஆனாலும், ஏற்கனவே உள்ள சாலைகளில் தான் அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பரபரப்பான இன்றைய சூழலில் வாகனங்களில் செல்வோரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை அனைவரும் வாகனங்களில் வேகமாக செல்வதையே விரும்புகின்றனர்.

இதற்கு வசதியாக அதிவேகமாக செல்லக்கூடிய வாகனங்களும் புதிது புதிதாக வரத்தொடங்கி விட்டன. இப்போதெல்லாம் அதிக வேகத்திறன் கொண்ட பைக்குகளை சர்வ சாதாரணமாக பலரும் வைத்திருப்பதை காண முடிகிறது. அந்த வகையில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பலர் சர்வ சாதாரணமாக ஜெட் வேகத்தில் பைக்குகளில் செல்கின்றனர். குறைவான நேரத்தில் நினைத்த இடங்களுக்கு விரைவாக சென்று விட முடியும், என்பதால் பலரும் வேகமாக செல்கின்றனர். இதுபோன்று, அதிவேகமாக செல்லும் வாகனங்களால் இசிஆர் சாலையில்  அதிகமாக நடக்கின்றன. விபத்தில் சிக்கும் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த விபத்துகளில் பெரும்பாலும் பாதிக்கப்படும் நபர்கள் சாலையோரம் நடந்து செல்பவர்கள் மற்றும் குறைவான வேகத்தில் செல்பவர்களாக இருக்கிறார்கள். எனவே, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அல்லது விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக செல்லும் பைக்குகளுக்கு போலீசார் தடை விதிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: