வாக்கு எண்ணும் மையம் அருகே நவீன வசதிகளுடன் கன்டெய்னர்: தென்காசி அருகே பரபரப்பு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் தென்காசியை அடுத்த கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து 26 தினங்கள் கழித்து மே 2ம்தேதி முடிவுகள் வெளியிடப்படுகிறது. இடைப்பட்ட நாளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றப்படக் கூடும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹேக் செய்யப்படும் என்பது போன்ற அச்சங்கள் எதிர்கட்சியினர் மத்தியில் உள்ளது.

இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுகிறதா என்பதை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளும் வெளியிலும் கட்சியினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள யுஎஸ்பி கல்லூரி வளாகத்திற்கு மிக அருகில் அதாவது இலத்தூர் ரவுண்டானா ஆய்க்குடி சாலையில் கல்லூரி வளாகத்திற்கு கீழ்புறம் இருந்து சிவராமன் பேட்டை ஊருக்குள் செல்லும் சாலையில் நேற்று இரவு கன்டெய்னர் ஒன்று புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்டு எம்ஜி என்னும் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டு வந்து இறங்கியது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தென்காசி நகர திமுக செயலாளர் சாதிர் தலைமையிலான திமுகவினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து விசாரித்தபோது அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று கட்டுமான பணிகளுக்காக கண்டனர் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறையினருக்கும் புகார் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிரேன் மூலம் கன்டெய்னரை தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: