சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் 20 ஆம் தேதி முதல் மீண்டும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அஞ்சும் அளவுக்கு வெயில் அதிகமாக இருக்கிறது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த போது திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சிக்குள்ளாகினர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் லேசான சாரல் மழையும் சில மாவட்டங்களில் கன மழையும் பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததன் படி பல இடங்களில் நல்ல மழை பெய்தது. ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் 20 ஆம் தேதி முதல் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த 22 மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் ஏப்ரல் 22ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: