குடியாத்தம், பேரணாம்பட்டு அருகே யானைகள் அட்டகாசத்தால் மா, வாழைகள் சேதம்: விவசாயிகள் வேதனை

ஆம்பூர்: குடியாத்தம், பேரணாம்பட்டு அருகே யானைகள் அட்டகாசத்தால் மாமரங்கள், வாழைமரங்கள் சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆந்திர வனச்சரகத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியேறிய 21 யானைகள் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதிக்குள் வந்தது. அந்த யானைகள் அவ்வப்போது கிராமத்திற்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. யானைகளை குடியாத்தம் வனத்துறையினர் விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று  அதிகாலை 3 மணியளவில் 21 யானைகள் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா, சைனகுண்டா,  தனகொண்டபள்ளி, ஆம்பூரான்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து மாந்தோப்புக்குள் 100க்கும் மேற்பட்ட மாமரக்கிளைகளை முறித்து சேதப்படுத்தியுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த  மாங்காய்களை தின்றது. அப்போது வன ரோந்து பணியிலிருந்த குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர். இதற்கிடையே, ஆம்பூர் அடுத்த சாரங்கல் மலைப்பகுதியில் யானைகள் நேற்று அட்டகாசம் செய்தது.

அப்போது, சாரங்கல் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் விவசாய நிலத்தில் இருந்த 30 வாழை மரங்களை சேதப்படுத்தியது. அதேபோல், பாண்டுரங்கன் என்பவருக்கு சொந்தமான 6 மாமரங்களின் கிளைகளை முறித்து சேதப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு 9 யானைகள் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா கிராமத்தில் உள்ள மாந்தோப்புக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட மா மரங்களைமுறித்து துவம்சம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு அருகே யானைகள் அட்டகாசத்தால் வாழை, மாமரங்கள் சேதமடைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Related Stories: