கிருஷ்ணன்கோவில் மூடப்படாத பள்ளத்தால் விபத்து: 20 நாட்கள் கடந்தும் மாநகராட்சி அலட்சியம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் புத்தன் அணை திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகளில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகின்றன. மேலும் இதற்காக பள்ளம் தோண்டும் போது ஏற்கனவே பதிக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய் ஆங்காங்கே உடைவதும் தொடர்கிறது. இந்நிலையில் கிருஷ்ணன்கோவில் வெள்ளாளர் மேல தெருவில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் கிருஷ்ணன்கோவில் கோயில் முன்பு பள்ளம் தோண்டியது. மேலும் அந்த பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் வால்வு பொருத்தினால் வெள்ளாளர் மேலதெருவிற்கு தண்ணீர் கிடைக்கும் என கூறி வேலையை தொடர்ந்தனர்.  ஆனால் பள்ளம் தோண்டி விட்டு வால்வு மாட்டாமல் அப்படியே போட்டுவிட்டு சென்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

 இது குறித்து அப்பகுதி முன்னாள் கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: கிருஷ்ணன்கோவில் வெள்ளாளர் மேலதெரு பகுதிக்கு கடந்த ஒருவருடமாக குடிநீர் சீராக செல்வது இல்லை. இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு கிருஷ்ணன்கோவில் பகுதியில் குடிநீர் குழாயில் வால்வு மாட்டி வெள்ளாளர் மேலதெருவிற்கு தண்ணீர் கொண்டு செல்லலாம் என தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து கிருஷ்ணன்கோவில் முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணியை பாதியிலேயே போட்டுவிட்டு சென்றுள்ளனர். 20 நாட்களுக்கு மேல் அந்த பள்ளம் அப்படியே உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகனத்தில் வருவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இரவு நேரத்தில் வரும் சில முதியவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்தனர். பைக்கில் வந்த சிலரும் இந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளனர். கிருஷ்ணன்கோவில் பகுதியில் சமையல் காஸ் சிலிண்டர் குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு சிலிண்டர்களை ஏற்றி வரும் லாரி இந்த பள்ளத்தால் வரமுடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் கிருஷ்ணன்கோவில் பகுதியில் சிலிண்டர் விநியோகம் பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாயை சரிசெய்து பள்ளத்தை உடனே மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Related Stories: