கொரோனா தொற்றால் விற்பனை சரிவு: தோட்டத்திலேயே அழுகி வீணாகும் ஜெர்பரா மலர்கள்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ரோஜா, சாமந்தி, கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட அலங்கார மலர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மலர்கள் உள்நாட்டிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக காதலர் தினம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதுபோலவே உள் நாட்டிலும் அதிகளவு மலர்கள் விற்பனையாகும். கொரோனா தொற்றால் தற்போது மலர் விற்பனை சரிந்துள்ளது. தமிழகத்தில் 75சதவீத ரோஜா, ஜெர்பரா மலர்கள் ஓசூரில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு, சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா, ஜெர்பரா மலர்கள் பசுமை குடில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் பெங்களூரு, பூன, நாசிக், உள்ளிட்ட பகுதிகளிலும் ரோஜாமலர் உற்பத்தியாகிறது. ஓசூர் பகுதியில்  தாஜ்மஹால், கிரான்ட்காலா, வெள்ளை, மஞ்சள், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகையான மலர்கள் உற்பத்தியாகிறது.  இதுகுறித்து ரோஜா மலர் ஏற்றுமதியாளர் ஹரிஷ் கூறுகையில், ‘ஒரு ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடிக்கு பசுமை குடில் அமைக்க சுமார் ₹50 லட்சம் செலவாகிறது. ரோஜா மலர்கள் உற்பத்திக்கு இரவில் 17 டிகிரி செல்சியஸ், பகல் நேரத்தில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு பகல் பொழுதில் 34 டிகிரி செல்சியசும், இரவு நேரத்தில் 22 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிலவியது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் சீதோஷ்ண நிலை சீரடைந்துள்ளது. 50 முதல் 55 நாட்களுக்கு பிறகு மகசூலுக்கு வர வேண்டிய மலர்கள் தற்போது சீதோஷ்ண நிலை காரணமாக 40 நாட்களிலேயே மலர்ந்து விடுகின்றன. உற்பத்தி செலவும் அதிகமாகியுள்ளது. தற்போது, கொரோனா தொற்றால் ரோஜா மலர், ஜெர்பரா மலர் விற்பனை சரிந்துள்ளது. இதனால், தோட்டத்திலேயே வீணாகும் மலர்களை குப்பையில் கொட்டும் நிலை காணப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,’ என்றார்.

Related Stories: