நீர்நிலை பகுதி என்று பத்திரப்பதிவு நிறுத்தி வைப்பு: 70ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் வீடு, நிலத்தை விற்க முடியாமல் தவிக்கும் மக்கள்

சேலம்: சேலம் அருகே 70 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள், தங்களது வீடு மற்றும் நிலத்தை தேவைக்கு விற்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். சேலம்-சங்ககிரி சாலையில் மகுடஞ்சாவடியை அடுத்துள்ளது வேம்படிதாளம் பகுதி. கடைகள், வணிவளாகங்கள், குடியிருப்புகள், வீடுகள் என்று ஏராளமான கட்டிடங்கள் வேம்படிதாளத்தில் உள்ளது. இதில் பல தலை முறைகளாக வசித்து வரும் குடும்பத்தினரும் ஏராளமாக உள்ளனர். இதேபோல் 70ஆண்டுகளுக்கு முன்னதாக சொந்தவீடு, கடைகள், வளாகங்கள் கட்டி வசிப்போரும், வாடகைக்கு விட்டுள்ளோரும் அதிகளவில் உள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாக இந்த பகுதியில் உள்ளவர்கள், தங்களுக்கு சொந்தமானவை என்று கூறிக் கொள்ளும் நிலங்களையோ, வீடுகளையோ பிறருக்கு விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதேபோல் பல ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்தில் முதலீடு செய்து பிளாட்டுகளை போட்டவர்களும் அதனை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த பகுதி சார்ந்த எந்த நிலங்களையோ அல்லது வீடுகளையோ அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்ய மறுப்பதே இதற்கு காரணமாக உள்ளது. கடந்த 2ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தநிலையானது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேம்படிதாளம் சேலத்திற்கும், சங்ககிரிக்கும் இடைப்பட்ட பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வணிகவளாகங்கள் கட்டப்பட்டுள்ளது. ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள், சிறுவணிக நிறுவனங்களும் அதிகளவில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள 85சதவீத மக்கள் சொந்த வீடுகளில் மட்டுமே வசித்து வருகின்றனர்.

நூறாண்டுக்கு மேல் தலைமுறைகள் கடந்து இப்பகுதியில் வசிக்கும் மக்களும் கணிசமாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் வசிக்கும் வீட்டிற்கும், தோட்டத்திற்கும், கடைகளுக்கும் முறையாக வரி செலுத்தி வருகின்றனர். தொழிலுக்கு ஏற்ற வகையில் உயர்மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில மாதங்களாக இப்பகுதி மக்கள், தங்களது தேவைகளுக்காக வீடுகள், நிலங்களை விற்க முடியவில்லை. பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றால், நீங்கள் வசிப்பது ஒரு காலத்தில் நீர்நிலையாக இருந்த பகுதி. எனவே அதை விற்க முடியாது. இதனால் பத்திரப்பதிவும் செய்ய முடியாது என்று கறாராக மறுத்து விடுகிறார்கள். ஏதோ ஒன்றிரண்டு பகுதிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்த பகுதியையும் நீர்நிலை என்று கூறி பட்டியல் ஒட்டி வைத்திருப்பதும், பத்திரப்பதிவு செய்ய மறுப்பதும் வேதனையாக உள்ளது.

இதற்கு அரசு உரிய தீர்வு காணாவிட்டால் பெரும் சர்ச்சைகள் எழுவதோடு தேவையில்லாத குழப்பங்களும் ஏற்படும். இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினர். இது குறித்து பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நீர்நிலை என்று வகைப்படுத்தப்பட்ட பட்டியல் தமிழக அரசு சார்பில் தரப்பட்டுள்ளது. இது போன்ற நிலத்திற்கு எந்தவித ஆவண பதிவும் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதி மன்ற கிளை வழங்கிய தீர்ப்பின் காரணமாக பத்திரப்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது வேம்படிதாளத்திற்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும். எனவே எந்த பகுதியில் நிலம் வாங்கினாலோ அல்லது விற்றாலோ சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள பட்டியலில் இல்லாத இடங்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம்,’ என்றனர்.

Related Stories: