கூடை, பெட்டி, பாய் தயாரிக்க பனை ஓலைக்கு மவுசு: கேரளா, ஆந்திராவுக்கு அதிகளவில் செல்கிறது

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பனை தொழில் உள்ளது. பனை மரத்தின் ஒவ்வொரு பொருளும் பயன் தரக்கூடியது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பனை பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பனை மரத்தில் இருந்து சீசன் காலங்களில் பதநீர் உற்பத்தி செய்யப்படும். இந்த பதநீரை காய்ச்சி வடிகட்டி ஊற்றி கருப்புக்கட்டி தயாரிப்பர். தற்போது பனை சீசன் தொடங்கியுள்ளதால், பனை ஏற வசதிகயை பனை ஓலைகளை களையெடுப்பர். அந்த பனை ஓலைகள் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் பனை ஓலைகளை பயன்படுத்தி பாய் தயாரித்தல், கூடை தயாரித்தல், பனை ஓலை நார்களை பயன்படுத்தி கட்டில் கட்டுதல் போன்ற உப தொழில்கள் நடைபெறும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமும் பனை பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை ஊக்குவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நெல்லை அடுத்துள்ள தருவை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பனை மரத்தில் இருந்து வெட்டப்பட்ட பதப்படுத்தப்பட்ட பனை ஓலை மற்றும் நார்களை கூடை, பெட்டி, பாய் போன்றவைகளை தயாரிப்பதற்காக தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி கேரளா, ஆந்திராவில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். இதற்காக இங்கு பனை மரங்கள் வைத்து பராமரிப்பவர்கள் பனை ஏறும் நபர்களை அழைத்து பனை ஓலை மற்றும் நார்களை பிரித்து எடுக்கின்றனர். ஓலைகளை பதப்படுத்தி அவற்றை அடுக்கி வியாபாரிகளுக்கு வழங்குகின்றனர். பதப்படுத்தப்பட்ட பனை ஓலைகளை வாங்கிச் செல்லும்  வியாபாரிகள் தங்களுக்கு தேவையான சைஸ்களில் ஓலைகளை பிரித்து எடுத்து அவற்றை கூடைகளாகவும், பிற பொருட்களாகவும் அழகிய வேலைப்பாடுகளுடன் தயாரித்து அதில் வர்ணம் பூசி அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர்.

இதுகுறித்து பனைமர  விவசாயிகள் கூறுகையில், பனை மரத்தில் இருந்து பலன் தருபவை பல உள்ளன. எங்களிடம் கேரள பகுதி வியாபாரிகள் பதப்படுத்தப்பட்ட பனை ஓலை ஒரு கட்டு ரூ.10  முதல் 15 வரை விலைக்கு வாங்குகின்றனர். இதுபோல் பனை நார்களும் வாங்கிச் செல்கின்றனர். அவற்றை அவர்கள் பனை ஓலைப் பெட்டி, கூடை உள்ளிட்ட அழகிய பொருட்களாக தயாரித்து விற்பனை செய்கின்றனர். எனவே பனை மரம் வளர்க்கும் விவசாயிகளை, தொழில் முனைவோர்களாக மாற்ற அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றனர்.

Related Stories: