தங்கம் விலையில் மேலும் மாற்றம் சவரன் ரூ.264 அதிகரிப்பு: நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.264 அதிகரித்தது. விலை அதிகரித்து வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒருநாள் விலை அதிகரித்தால், மறுநாள் விலை குறைவதுமான நிலையும் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி ஒரு சவரன் ரூ.35,264க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.32 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,440க்கும், சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,520க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை குறைந்தது.

அதே நேரத்தில் 15ம் தேதி விலையை விட கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,420க்கும், சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,360க்கும் விற்கப்பட்டது.நேற்றும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது கிராமுக்கு ரூ.33 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,453க்கும், சவரனுக்கு ரூ.264 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,624க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்து வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

Related Stories: