×

சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனையிலும் பாதுகாப்பு நலன் கருதி உள்நோயாளிகள் சிகிச்சை நிறுத்தம்: அறுவை சிகிச்சைகள் தொடரும்; மருத்துவர்கள் தகவல்

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் பாதிப்பு, பாதுகாப்பு நலன்  கருதி உள்நோயாளிகள் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தள்ளி வைக்க முடியாத அறுவை சிகிச்சைகள் மட்டும் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதலாக படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோன்று, அறிகுறிகள் உள்ளவர்களை கண்காணிக்கும் வகையில் கோவிட் கேர் சென்டர்களும் அதிகரித்து வருகின்றன. அதன்படி சென்னையில் 12,500 படுக்கைகளுடன் கூடிய மையங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் குறைந்த அளவு படுக்கைகள்தான் உள்ளன. அதேபோன்று ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்களை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாதாரண அறுவை சிகிச்சைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமான தள்ளி வைக்க முடியாத அறுவை சிகிச்சைகள் மட்டும் தற்போது மேற்கொள்ளப் படுகிறது. உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டுமானால் கொரோனா பாதிப்பு இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் அவசியமாகும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் பாதிப்பு பாதுகாப்பு நலன் கருதி தற்போது உள்நோயாளிகள் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தொற்று வேகமாக பரவுவதால் புற நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வராமல் இருப்பது நல்லது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோன்று அரசு மகப்பேறு குழந்தைகள் நல மருத்துவமனைகளில் கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. குழந்தைகள் நல மருத்துவமனையில் முக்கியமான நோய்களுக்கு மட்டும் தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மருந்து மாத்திரை மூலம் நோய்கள் சரியாக நீண்ட நாட்களுக்கு மருந்துகளை கொடுத்து அனுப்புவதாக கூறுகின்றனர். சாதாரண அறுவை சிகிச்சைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமான தள்ளி வைக்க முடியாத அறுவை சிகிச்சைகள் மட்டும் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

Tags : Chennai , Inpatient treatment halted at all government hospitals in Chennai for safety reasons: surgeries to continue; Physicians information
× RELATED சென்னையில் தேவையில்லாமல் ஊரடங்கை...