வேளச்சேரி தொகுதி 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு 548 பேரில் 186 பேர் மட்டுமே வாக்களிப்பு: கடந்த முறை 220 பேர் வாக்களித்தனர்

வேளச்சேரி: வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது எண் வாக்குச் சாவடியில் நேற்று மறுவாக்குபதிவு தொடங்கிய நிலையில் 34 சதவீதம் பேர் அதாவது 186 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். கடந்த முறையை விட 34 வாக்குகள் குறைந்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் கடந்த 6ம் தேதி காலை 7 மணிக்கு துவங்கி மாலை 7 மணிக்கு முடிந்ததது. வாக்குபதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன. சென்னை தொகுதியில் உள்ள சீதாராம் நகர் டிஏவி பள்ளியில் 92-வது ஆண்கள் வாக்குச்சாவடியிலிருந்து 2 மின்னணு இயந்திரங்கள் ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு விவிபாட் இயந்திரத்தை விதிகளை மீறி ஊழியர்கள் எடுத்து சென்றனர். அப்போது பொதுமக்கள் அவர்களை வேளச்சேரி தரமணி 100 அடி சாலை டான்சி நகர் தனியார் மருத்துவமனை அருகே மடக்கிப் பிடித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக உதவி பொறியாளர் செந்தில்குமார், தூய்மைப் பணி மேஸ்திரி வேளாங்கண்ணி, தூய்மை பணியாளர் சரவணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வேளச்சேரி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா இந்திய தேர்தல் ஆணையத்திடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தியதில் விவிபாட் இயந்திரத்தில் மட்டும் 15 வாக்குகள் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று மாலை தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்புலட்சுமி தலைமையில் பாதுகாக்கப்பட்ட வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாக்களிக்கும் மையத்திற்கு வாக்குச்சாவடி பெட்டிகளை எடுத்து வந்தனர். இந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக அசன் மவுலானா, அதிமுக- பாஜ சார்பில் அசோக், மநீம சார்பில் சந்தோஷ்பாபு உட்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேளச்சேரி சீதா ராம்நகர் 1வது தெருவில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளி வளாகத்தில் மறுவாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது.

இந்த வாக்குச்சாவடியில் 548 ஆண் வாக்காளர்கள் உள்ள நிலையில் 186 பேர் மட்டுமே மறுவாக்களித்தனர். கடந்த முறை 220 பேர் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டது. இந்த மறுவாக்குப்பதிவு நேற்று இரவு 7 மணி வரை நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் இரவு 7.30 மணியளவில் மூடி சீலிடப்பட்டது. பின்னர் தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பதுடன் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டு சீல் வைக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டது.

Related Stories: