ரேஷன் கடைகளில் எந்த புகாரும் வரக்கூடாது: பதிவாளர் உத்தரவு

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வழங்குவது தொடர்பாக எந்த புகாருக்கும் இடம் கொடுக்காமல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து தமிழக கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) கிரேஸ் பச்சாவ் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: தற்போது தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் பொது விநியோக திட்டம் செம்மையாகவும், புகாருக்கு இடமின்றியும் செயல்படுவதையும் ஆய்வு அலுவலர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்.

அதன்படி, நியாயவிலை கடைகளுக்கு கிடங்குகளில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் பெறப்படும்போதும், குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் முன்னரே, பெறப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து பரிசோதிக்க நியாயவிலை கடை பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். முக்கியமாக, நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தின் அளவு, தரம், கடை திறப்பு, கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு, முதலில் கடையில் பெறப்பட்ட பொருட்களை முதலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் என்ற நடைமுறையை பின்பற்றப்படுவது, கொரோனா மற்றும் கோவிட்-19 பாதுகாப்பு வசதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவது தொடர்பாக எந்தவொரு புகாரும் பெறப்படாமல் தங்கள் மண்டலத்தில் உள்ள நியாயவிலை கடைகள் செயல்படுவதை அவ்வப்போது கண்காணித்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>