தடுப்பூசிகள் தேவையான அளவு இருப்பு உள்ளது பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போட நடவடிக்கை: மேலும் 2 லட்சம் தடுப்பூசிகள் வருகிறது; பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தடுப்பூசிகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. மேலும் 2 லட்சம் தடுப்பூசி வர உள்ளது. பொதுமக்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி அனைத்து மாவட்டங்களும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 45,92,124 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலில் தடுப்பூசி போட்ட பிறகு நிறைய மக்கள் ஒருவித பயத்தில் தடுப்பூசி போடுவதை தவிர்த்து வந்தனர். தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவுடன் இப்போது மக்கள் தாங்களாகவே ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இதனால் தமிழகத்தில் ஒரு சில தடுப்பூசி மையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆரம்பத்தில் பயத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயக்கினர். ஆனால், தற்போது தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களாகவே ஆர்வமுடன் தடுப்பூசி போட வருகின்றனர். தொடக்கத்தில் 10 ஆயிரம், 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதையடுத்து நாள் ஒன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை நாளடைவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.தற்போது 5 லட்சம் தடுப்பூசி இருப்பு உள்ளது. இது மூன்று நாட்களுக்கு போதுமானது. மேலும் இன்று காலைக்குள் மீண்டும் 2 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளது.

இதுதவிர மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசிகள் தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படும். பொதுமக்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிக தடுப்பூசிகள் இருப்பு வைக்க முடியாது. இன்னும் 3, 4 நாட்களுக்கு தேவையான அளவில் இருப்பு உள்ளது. மேலும் தேவைப்படும் பட்சத்தில் மத்திய அரசிடம் இருந்து வரவழைக்கப்படும். வாரந்தோறும் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்புகிறது. எனவே பொதுமக்கள் தடுப்பூசி இல்லை என்ற அளவில் பார்த்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினர்.

Related Stories: