திருத்துறைப்பூண்டி தாலுகா கொள்முதல் நிலையத்தில் 20,000 நெல் மூட்டைகள் சேதம்: மழையில் நனைந்து வீணானது

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் கடந்த ஜனவரி மாதம் 64 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இங்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள்  கீழ்பாண்டி, கொக்கலாடி, சுந்தரபுரி, விளக்குடி பகுதிகளில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கு மற்றும் கோவிலூர் குடோனில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது திருத்துறைப்பூண்டி டவுன் இரண்டாம் நம்பர், மாங்குடி, சேகல், இடும்பாவனம், மன்னங்கோட்டகம் உள்ளிட்ட 6 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மட்டும் இயங்கி வருகிறது. இங்கு தினமும் 150 முதல் 200 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

கொள்முதல் நிலையங்களில் சுமார் 5000 மூட்டைகள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நான்கு திறந்தவெளி சேமிப்பு கிடங்கு முழுவதும் நெல்மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. இனி இங்கு வைக்க முடியாது. இது குறித்து திருத்துறைப்பூண்டி தாலுகா லாரி உரிமையாளர்கள் நல சங்க நிர்வாகிகள் கூறுகையில், நேரடி நெல்கொள்முதல்நிலையங்களில் இருந்து லாரிகளில் நெல்மூட்டைகள் கோவிலூர் நெல் குடோனுக்கு மட்டும் ஏற்றி செல்லப்படுகிறது. அங்கு மூன்று நாட்களுக்கு மேல் நெல்மூட்டைகள் ஏற்றி சென்ற லாரிகள் இறக்காமல் நிற்கிறது.

இங்கு அரிசி மூட்டைகள் ஏற்றி வரும் லாரிகள் மட்டும் இறக்கப்படுகிறது. காரணம் ஒரு லாரியில் அரிசி மூட்டைகள் இறக்கினால் ரூ.5,000 வரை மாமூல் கிடைக்கிறது. இதனால் அரிசி மூட்டைகள் ஏற்றி வரும் லாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்கிறது. நேற்று மதியம் அதிகளவு மழை பெய்தது. இதனால் பல நெரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கிவைக்கப்பட்டு உள்ள சுமார் 20,000 நெல்மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் மெத்தன போக்கே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

Related Stories: