போலீஸ் விசாரணைக்கு சென்றவர் மர்ம மரண வழக்கு திருமங்கலம் அமமுக வேட்பாளர் ஐகோர்ட் கிளையில் ஆஜர்: குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க உத்தரவு

மதுரை: போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், திருமங்கலம் அமமுக வேட்பாளர் ஐகோர்ட் கிளையில் ஆஜர்படுத்தப்பட்டார். மதுரை, சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பாலமுருகனை கடத்தல் வழக்கு விசாரணைக்காக அவனியாபுரம் போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் அடித்து துன்புறுத்தியதால் அவர் மரணமடைந்ததாகவும், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரி அவரது தந்தை முத்து கருப்பன் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  

பின்னர் அவர் தனது மனுவை வாபஸ் பெற்றார். போலீசாரின் அச்சுறுத்தல் காரணமாக முத்துகருப்பன் மனுவை வாபஸ் பெற்றதாக வக்கீல் ஹென்றி டிபேன், ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனடிப்படையில், தாமாக முன்வந்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது, முத்துக்கருப்பனை சிலர் மிரட்டியதாக வெளிவந்த ஆடியோ உரையாடல் தொடர்பாக கூடுதல் பதிவாளர் ஜெனரல் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து போனில் பேசியதாக கூறப்படும் திருமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன், கதிர், லோகநாதன் மற்றும் ரமேஷ் ஆகிய 4 பேரையும் ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருமங்கலம் அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் உள்ளிட்ட 4 பேரும் வீடியோ கான்பரன்சில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது குற்றச்சாட்டு நகலை அவர்களுக்கு வழங்கவும் அதற்கு 4 பேரும் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 14க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Related Stories:

>