ரயில் நிலைய பிளாட்பாரத்தில் சாக்கு பையால் உடலை மூடி அசைவற்று கிடந்த வாலிபர்: கொலை என வாட்ஸ்அப் தகவலால் பரபரப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் சாக்கு பையை உடல் முழுவதும் மூடி தூங்கிக் கொண்டிருந்த வாலிபர், கொலை செய்து வீசப்பட்டதாக வாட்ஸ் அப்பில் பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில், இரட்டை ரயில் பாதைக்காக தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. 2 வது பிளாட்பாரத்தில் மட்டுமே ரயில் வந்து செல்கிறது. காலை வேளையில் இந்த பிளாட்பாரத்தில் பலர் நடை பயிற்சி மேற்கொள்வார்கள். நேற்று காலையிலும் ஏராளமானவர்கள் நடைபயிற்சியில் இருந்தனர். அப்போது திருவனந்தபுரம் வழிப்பாதையில் பிளாட்பாரத்தையொட்டி மஞ்சள் கலர் சாக்கு பையால் உடல் முழுவதும் மூடியபடி ஒருவர் கிடந்தார்.

காலை 8 மணியளவில் வெயில் சுட்டெரிப்பது கூட தெரியாமல் கிடந்துள்ளார். இதை பார்த்த சிலர், வாலிபரை கொலை செய்து சாக்குமூடையில் கட்டி வீசி உள்ளனர் என வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பினர். இந்த தகவல் காவல்துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தெரிய வர அங்கு குவிந்தனர். திடீரென அந்த சாக்குப்பைக்குள் கிடந்த வாலிபர் எழுந்து என்ன நடந்தது என தெரியாமல், தனது அருகில் கிடந்த செருப்பை போட்டுக் கொண்டு நடந்து சென்றார். இதனால் அங்கு வந்தவர்கள் ஒருவரை ஒருவர் மாறி, மாறி பார்த்து சிரித்துக் கொண்டே சென்றனர். வாட்ஸ் அப்பில் வரும் தகவல் எந்தளவுக்கு பரபரப்பை ஏற்படுத்துகிறது என போலீசாரும் நொந்தபடி சென்றனர்.

Related Stories:

>