×

ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற சட்டதிருத்தத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  ஏழு உட்பிரிவுகளை சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டதால் அதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில், தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளைச் சேர்ந்த மக்களை, ‘தேவேந்திர குல வேளாளர்’ என, ஒரே பெயரில் அழைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளை நிறுத்தக் கோரியும், அரசிதழில் வெளியிட கூடாது எனவும் உத்தரவிடக் கோரி  கரூரைச் சேர்ந்த கார்வேந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 அவர் தனது மனுவில், மக்களவையில்  தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி. கூட இல்லாத நிலையில், இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களின் அரசியல் லாபத்துக்காகவும், தேர்தல் ஆதாயத்துக்காகவும் இந்த சட்டம்  நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த சட்டத்திருத்தத்துக்கு குடியரசு தலைவர் ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Devendra Kula Vilakar ,Legislature ,President ,Chennai , Chennai High Court dismisses case against Devendra Kula Velalar name change bill as President approves it
× RELATED தமிழக எம்.பி.க்கள் அவையில் இல்லாத போது...