இன்று ஒரே நாளில் 2 ஆட்டம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசனில் இன்று ஒரே நாளில்  பெங்களூர் - கொல்கத்தா, டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னையில் இன்று மாலை நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி - கேகேஆர் அணிகள் மோதுகின்றன. தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை அணியையும், அடுத்து ஐதராபாத் அணியையும் வீழ்த்திய உற்சாகத்துடன் ஹாட்ரிக் வெற்றிக்கு குறி வைக்கிறது பெங்களூர். கோபக்கார கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியில் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ், ஹர்ஷல் படேல், ஜேமிசன், சிராஜ் ஆகியோர் இன்றைய போட்டியிலும் கலக்கக் கூடும். வாஷிங்டனுக்கு அதிக ஓவர்கள் வீசும் வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஐதராபாத்துக்கு எதிராக தனது முதல் போட்டியில் 10 ரன் வித்தியாசத்தில் வென்ற கேகேஆர், அடுத்து மும்பைக்கு எதிராக 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ராணா, திரிபாதி, கார்த்திக், கில், கம்மின்ஸ், பிரசித், வருண் ஆகியோருடன் கேப்டன் மோர்கனும் சிறப்பாக பங்களித்தால் பெங்களுருக்கு சவாலாக இருக்கும்.

* இதுவரை மோதியதில்...

இரு அணிகளும் 26 லீக் ஆட்டங்களில் மோதியதில் கொல்கத்தா 14 - 12 என முன்னிலை வகிக்கிறது. இதுவரை பிளேஆப் சுற்றில் மோதியதில்லை. கடந்த ஆண்டு 2 லீக் போட்டியிலும் 82 ரன், 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் தான் வென்றது.கடைசி 5 போட்டிகளில் பெங்களூர் 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதிகபட்சமாக கொல்கத்தா 222 ரன், பெங்களூர் 213 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக  கொல்கத்தா 84, பெங்களூர் 49 ரன்னில் சுருண்டுள்ளன.

* இதுவரை மோதியதில்....

டெல்லி - பஞ்சாப் மோதிய 26 ஆட்டங்களில், பஞ்சாப் 15 - 11 என முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு ஒரு லீக் போட்டியில் டெல்லி சூப்பர் ஓவரில் வென்றது. மற்ற லீக் போட்டியில் பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.  கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் பஞ்சாப் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அதிகபட்சமாக டெல்லி 231 ரன், பஞ்சாப் 202 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாப் 104, டெல்லி 67 ரன்னில் சுருண்டுள்ளன.

* டெல்லி - பஞ்சாப் பலப்பரீட்சை

மும்பையில் இரவு நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. டெல்லி தனது முதல் ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது. தொடர்ந்து 2வது ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் போராடி தோற்றது. இன்றைய ஆட்டத்தில் பிரித்வி, தவான், ஸ்டாய்னிஸ், வோக்ஸ், ரபாடா, புதிதாக  சேர உள்ள அன்ரிச் நோர்ட்ஜ், முக்கியமாக ஆர்.அஷ்வின் ஆகியோரை கேப்டன் ரிஷப் எப்படி பயன்படுத்துகிறார் என்பதே ஆட்டத்தின் போக்கை முடிவு செய்யும்.

அதற்கு ஏற்ப ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் திட்டமிட்டு இன்று களம் காணும். முதல் ஆட்டத்தில் ரன் குவித்து ராஜஸ்தானை வென்ற பஞ்சாப், 2வது ஆட்டத்தில் ரன் குவிக்க தவறியதால் சென்னையிடம் தோற்றது. அதனால் இன்றைய போட்டியில் ராகுல், ஹூடா, கேல், ஷாருக்கான், பூரன் அதிரடி எடுபட்டால் மட்டுமே டெல்லிக்கு நெருக்கடி கொடுக்கலாம். ரிச்சர்ட்சன், ஷமி, எம்.அஷ்வின், அர்ஷ்தீப் பந்துவீச்சில் கலக்க காத்திருக்கின்றனர். டேவிட் மாலன் களமிறங்கவும் வாய்ப்பு இருக்கிறது. மொத்தத்தில் இன்றைய 2 ஆட்டங்களும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

Related Stories:

>