×

கிச்சன் டைரீஸ்

நன்றி குங்குமம் தோழி

டயட் மேனியா


ஜி.எம். டயட் பற்றி ஏற்கெனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியர்கள் அதிரடியாக எடை குறைய வேண்டும் என்பதற்காக உருவாக்கிய இந்த டயட்டை ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள், முன்னாள் விளையாட்டு வீரர்கள் என உலகம் முழுதும் உள்ள செலிபிரிட்டிகள் பின்பற்ற தொடங்கவே இது திடீரென அதிரிபுதிரி வைரலானது.

ஒரே வாரத்தில் பத்து கிலோ வரை அதிரடியாக எடை குறையலாம் என்ற வசீகரம் திருமணத்துக்கு தயாராகும் இளையோர் முதல் தொப்பையோடு தவிக்கும் மத்திய வயதுக்காரர்கள் வரை அனைவரையும் ஈர்த்தது. ஏழு நாட்கள் ஏழு விதமான உணவுகள், உடற்பயிற்சி ஆகிய கடுமையான சட்டங்கள் கொண்ட இந்த ஜி.எம்.  டயட் பற்றி வாசகர்களுக்குப் பலவிதமான சந்தேகங்கள்.

இந்த இதழில் ஜி.எம் டயட் தொடர்பான பொதுவான ஐயங்களையும் அதற்கான விளக்கங்களையும் பார்ப்போம். “ஜி.எம். டயட் இருப்பதால் உடலில் உள்ள நீர் மட்டும்தான் இழக்கப்படுமா? நீர் உடம்பு உள்ளவர்களுக்குத்தான் இந்த டயட் பொருந்துமா?”“அப்படி இல்லை. உடலில் உபரியாக உள்ள நீர் முழுமையாக வெளியேறும் என்பது உண்மைதான். ஆனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பும் கரையவே செய்யும். உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.”

“ஜி.எம். டயட்டை தொடர்ந்து பின்பற்றலாமா? என்ன கால இடைவெளியில் இதைப் பின்பற்றுவது?’

“இது கடுமையான டயட் என்பதால் தொடர்ந்து பின்பற்றக் கூடாது. ஜி.எம். டயட் என்பது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் நோக்கி நம்மைத் திருப்புவது என்பதால், முதல் ஏழு நாட்கள் இந்த டயட்டை பின்பற்றிய பிறகு குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு விடுப்பு கொடுப்பது நல்லது. ஆனால், இந்த டயட் விடுப்புக் காலங்களில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது அவசியம். அதிக எடை உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையோடு ஓரிரு வார இடைவெளிக்குப் பிறகுகூட மீண்டும் இந்த டயட்டில் இறங்கலாம். கவனம் மருத்துவ ஆலோசனை அவசியம்.”

“எத்தனை முறை இந்த டயட்டைப் பின்பற்றலாம்?”

‘‘அப்படி கணக்குகள் ஏதும் இல்லை. மேலே குறிப்பிட்டுள்ளபடி குறித்த கால இடைவெளிவிட்டு இந்த டயட்டை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால், அது அவரவர் உடல்வாகைப் பொறுத்த விஷயம் என்பதால், மருத்துவர் ஆலோசனை அவசியம்.”“ஜி.எம். டயட்டில் தேவையான அளவு எடையைக் குறைத்த பின் என்ன சாப்பிடலாம்?”‘‘நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகிய அனைத்து சத்துக்களும் அடங்கிய ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளைச் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்ய மறக்காதீர்கள். ஒரு நாளுக்கு சராசரியாக 2000 கலோரி தேவை. அதற்கு அதிகமாக சேர்த்த கலோரிகளை அன்றன்றே எரித்துவிட வேண்டியது அவசியம்.”

“ஜி.எம். டயட்டை யார் பின்பற்றக் கூடாது?”

“சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், நீண்டகால உடல்நலப் பிரச்னை உடையவர்கள் இந்த டயட்டைத் தவிர்க்கவும்.”இந்த டயட்டின் போது காபி, டீ பருகலாமா?”

“கூடாது. கடைசி இரு நாட்கள் மட்டும் கிரீன் டீ பருகலாம். வெந்நீரில் மூலிகைகளைப் போட்டுப் பருகலாம். ஆனால், டீ, காபி போன்ற காஃபின் பொருட்களைச் சேர்க்காமல் இருப்பதே டயட் முழுமையான பலன் கிடைப்பதற்கான வழி.”“இந்த டயட் இருக்கும்போது, அதிகாலையில் வெந்நீரில், எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடிக்கலாமா?”

“எலுமிச்சைச் சாற்றை வெறும் வயிற்றில் குடிப்பதால் செரிமானம் மேம்படும் என்பதால் செய்யலாம். ஆனால், எலுமிச்சை உடலில் அமிலத்தைச் சேர்ப்பதால் அதைப் பருகிய அரை மணி நேரம் கழித்தே காலை உணவை உண்ண வேண்டும்.இல்லாவிடில், செரிமானப் பிரச்னை ஏற்படக்கூடும். தேன் உலகின் சிறந்த இனிப்புப் பொருள் என்றாலும் தேனின் கலோரி அதிகம். எனவே, ஜி.எம். டயட் காலங்களில் தேனைத்
தவிர்ப்பது நல்லது.’

“காய்கறிகள் மற்றும் அசைவங்களைச் சமைக்க எண்ணெய் பயன்படுத்தலாமா?”

“கூடாது. ஜி.எம். டயட்டில் காய்கறிகளைப் பொரிக்கவோ, தாளிக்கவோ கூடாது. அசைவங்களை வேகவைத்துச் சாப்பிடலாம்.”

“மிளகு, சோம்பு உள்ளிட்ட வாசனைப் பொருட்கள், உப்பு சேர்க்கலாமா?”“அளவாகச் சேர்க்கலாம் தவறு இல்லை. ஜி.எம். டயட்டில் தண்ணீர் அதிகமாகப் பருகுவதால் உடலில் தாதுஉப்புக்கள் குறைந்திருக்கும். எனவே, மிளகு, சோம்பு, பட்டை போன்ற வாசனைப் பொருட்களையும் உப்பையும் சேர்ப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான தாதுஉப்புக்கள் கிடைக்கும்.”

“உலர் பழங்கள், நட்ஸ் சாப்பிடலாமா?”

“உலர் பழங்கள்,  நட்ஸில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளன. எனவே அவை உடலுக்கு உடனடி எனர்ஜி கொடுத்தாலும் ஜி.எம். டயட்டின் போது தவிர்க்க வேண்டியது அவசியம். ஆனால், ஜி.எம். டயட் பின்பற்றாத நாட்களில் இவற்றை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை.”

“சப்பாத்தி, ரொட்டி, புல்கா, கோதுமை பிரெட், பருப்புகள் சாப்பிடலாமா?”

“இவற்றில் குளூட்டன் (Gluten) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது, எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே, இவற்றை ஜி.எம். டயட் நாட்களில் தவிர்ப்பது நல்லது.”

ஃபுட் சயின்ஸ்

வைட்டமின் பி7 எனப்படும் பயோட்டின்தான் இந்த வார சீஃப் கெஸ்ட். பயோட்டினை `முடிக்கான வைட்டமின்’ என்றும் சொல்லலாம். இதற்கு, வைட்டமின் ஹெச் அதாவது ஹேர் (hair) வைட்டமின் என்றுகூட ஒரு பெயர் உண்டு. இன்றைக்கு இருபது வயதிலேயே முடி கொட்டும் பிரச்னை அதிகரித்திருக்கிறது. முடி கொட்டுவதற்குப் பல காரணிகள் உள்ளன. அதில் வைட்டமின் பி7 குறைபாடும் ஒன்று.

வைட்டமின் பி7, நீரில் கரையக்கூடிய வைட்டமின். இது துணை என்சைமாகவும்  செயல்படுகிறது. மூளையின் செயல்பாட்டுக்கு ஃபேட்டி அமிலங்கள் இன்றியமையாதவை. நாம் சாப்பிடும் முட்டை போன்ற உணவுகளில் இருக்கும் ஃபேட்டி அமிலங்களை உடல் கிரகிப்பதற்கு பயோட்டின் துணைபுரிகிறது. சர்க்கரை நோயாளிகள் மற்றும் நகங்கள் சிறிது சிறிதாகத் தானாகவே உடையக்கூடிய பிரச்னை (Brittle Nails) உள்ளவர்களுக்கு, பயோட்டின் பரிந்துரைக்கப்படுகிறது.

பயோட்டின், வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய டயாபடிக் நியூரோபதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் பயோட்டின் பயன்படுகிறது.பயோட்டின் பெரும்பாலான உணவுகளில் சிறிதளவு இருக்கிறது. எனினும், முழு கோதுமை, மைதா கலக்காத கோதுமை பிரெட், முட்டை, பால் பொருட்கள், வேர்க்கடலை, சோயா நட்ஸ், கீரைகள், சாலமன் மீன், கோழி இறைச்சியில் சற்று அதிக அளவு உள்ளது.

உணவுகளில் இருந்தே இந்தச் சத்தை நாம் பெற முடியும். இந்தியாவில் பயோட்டின் சத்துக் குறைபாடு மிகமிகக் குறைவு என்பதால், கவலைப்படத் தேவை இல்லை. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் மட்டும் மருத்துவர்கள் பரிந்துரைத்தால் பயோட்டின் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
சில மருந்துகளின் வீரியத்தை பயோட்டின் குறைத்து விடும் என்பதால், பயோட்டின் மாத்திரை எடுப்பதற்கு முன்னர் மருத்துவர் ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.

முட்டையைச் சமைக்காமல் பச்சையாகக் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, பயோட்டின் சத்து உடலில் தங்காது. இதனால், பயோட்டின் குறைபாடு ஏற்பட்டு முடி கொட்டுதல், நகங்கள் உடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, முட்டையை வேகவைத்தோ அல்லது அரைவேக்காடாகவோ, ஆம்லெட்டாகவோ சாப்பிடலாம்.

உணவு விதி #28

முக்கால் வயிற்றில் எழுந்துவிடுங்கள். இது ஒரு பொன்விதி. இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற உணர்வு இருக்கும்போதே எழுந்துவிடுவேன். அதுவே ஃபுட் சீக்ரெட் என்று ஒருமுறை இந்திரா காந்தி சொன்னார். வயிறு முட்ட உண்பது நிச்சயம் நல்ல பழக்கம் அல்ல. உணவிலிருந்து வெளிப்படும் அமிலங்கள் வேதிவினையாற்ற சிறிதாவது வயிற்றில் இடம் வேண்டும் அல்லவா? எனவே, முக்கால் வயிறு நிறைந்ததுமே எழுந்துவிடுங்கள். குறைந்தபட்சம் முதல் ஏப்பம் வந்ததும் சாப்பிடுவதை நிறுத்திவிடுவது மிகவும் நல்லது.

எக்ஸ்பர்ட் விசிட்

நவீன வாழ்க்கைமுறை நமக்குத் தந்த பரிசுகளில் ஒன்று இளமையில் முதுமை. இன்று இளவயதினரின் முகமும் சருமமும்கூட முதியவர்களைப் போல் வெளிறி, அதன் இழுவைத்திறன் குலைந்து, பொலிவிழந்து காணப்படுகிறது. சில இயற்கையான உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம் என்றும் இளமையாக இருக்கலாம் என்று சொல்கிறார் தோல் மருத்துவர் அபர்ணா சந்தானம்.

அவர் தரும் ஆண்டி-ஏஜிங் ஃபுட் டிப்ஸ் இதோ… காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து மட்டுமே இருப்பதாக இதுவரை சொல்லி வந்தார்கள். தற்போது, இவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு நாம் நினைப்பதைவிட அதிகம் என்று சொல்கிறார்கள். அதாவது, மேக்ரோ நியூட்ரிஷியண்ட்ஸ் எனப்படும் கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நார்ச்சத்தைத் தவிரவும் எண்ணற்ற மைக்ரோ நியூட்ரிஷியண்ட்ஸ்களான வைட்டமின், மினரல்கள் மட்டும் அல்லது பலவகையான பைட்டோ நியூட்ரிஷியண்ட்ஸ் எனும் நுண்ணூட்டச்சத்துகளும் காய்கறிகளில் உள்ளன.

தாவரங்களை புற ஊதாக் கதிர்கள் உள்ளிட்ட கடினமான சுற்றுச்சூழலில் இருந்து காப்பவை இந்த பைட்டோ நியூட்ரிஷியண்ட்ஸ்களே. எனவே, இவற்றை போதுமான அளவு நாம் உண்ணும்போது ஃப்ரீ ரேடிக்கல்ஸ் எனும் முதுமைக்கு எதிராகப் போராடும் திறனை உடல் இயல்பாகவே பெறுகிறது. ஒவ்வொரு தாவரத்திலும் ஒவ்வொரு வகையான பைட்டோ நியூட்ரிஷியண்ட்ஸ் உள்ளது. எனவே, ஒவ்வொன்றையும் சமவிகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பைட்டோ நியூட்ரிஷியண்ஸ்டுகளை காய்கறியின் குடும்ப வகை, வேதிக்கட்டுமானம், உடலியல் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்க முடியும். பொதுவாக, ஒரு தாவரத்தில் எது மிக முக்கியமான உள்ளடமாக உள்ளது என்பதைக் கொண்டு வகைப்படுத்துவது எளிது. நிறத்தை வைத்து பைட்டோ நியூட்ரிஷியண்ஸ்டுகளை வகைப்படுத்துவதும் மிகச் சிறந்த முறைதான். அதிலும் சில வகைகள் உள்ளன.

உதாரணமாக, ஃப்ளேவனாய்ட்ஸ் எனும் பீனல்களிலிருந்து வரும் நிறமி தான் ஒவ்வொரு கனிக்கும் அதன் நிறத்தைத் தருகிறது. கத்தரிக்காய்க்கு நீலத்தையும் திராட்சைக்கு ஊதா வண்ணத்தையும் பூசணிக்கு ஆரஞ்சு வண்ணத்தையும் தக்காளிக்கு சிவப்பு வண்ணத்தையும் தருவது இவைதான்.
சோயாபீன்ஸ்களில் ஐசோஃப்ளேவனாய்டுகள் உள்ளன. தாவரங்களின் ஹார்மோன்களான பைஸ்ட்ரோஜோன்ஸைக் கொண்டிருக்கும் இவை நட்ஸ்களிலும் ஆளிவிதையிலும் நிறைந்துள்ளன.

ஆர்கானிக் அமிலங்களும் சருமப் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம். இதில் ஃபெரூலிக் அமிலம் முழு தானியங்களில் நிறைந்துள்ளது. வைட்டமின் சியுடன் இது இணைந்து சருமம் முதுமையடைவதை தாமதப்படுத்துகிறது.சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றில் டெர்போனாய்டுகள் நிறைந்துள்ளன. மேலும் இவற்றில் கேட்ரோனாய்டு எனும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்து, கோஎன்சைம் க்யூ10, பைட்டோஸ்டீரோல்ஸ், டோகோபிரோல்ஸ், டோகோட்ரினோல்ஸ் எனும் வைட்டமின் இ-க்கு இணையான சத்துகளும் நிறைந்துள்ளன.

முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புரோகோலி, பூண்டு போன்றவற்றில் உயிர்-கந்தகச் சத்து நிறைந்துள்ளது. இவையும் சருமத்துக்கு மிகவும் ஏற்றவை. முதுமையிலிருந்து நம்மை என்றென்றும் காக்கும்.இதைத் தவிர, ஃப்ரீ ரேடிக்கல்ஸைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, மஞ்சள், லவங்கம், பட்டை, கிராம்பு, சோம்பு, மிளகு ஆகியவற்றையும் அவ்வப்போது பயன்படுத்தலாம்.

சூயிங்கம் முதலில் மென்றது யார்?

இந்தக் கேள்விக்கு மிகத் துல்லியமான பதிலைச் சொல்வது கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சூயிங்கம் மெல்வது என்ற பழக்கம் இன்றைய தலைமுறைக்கானது மட்டும் அல்ல. மிகப் பழங்காலந்தொட்டே பல்வேறு ஆதி இனக் குழுக்கள் சூயிங்கம் போன்ற இழுவைத்தன்மை கொண்ட பிசினான பொருளை மென்று வந்திருக்கின்றன. ஒருவகையில் அவையே இன்றைய சூயிங்கம்களின் தாத்தாக்கள்.

ஃபின்லாந்தில் உலகின் மிகத்தொன்மையான சூயிங்கம் என ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிர்ச் பட்டையைக்  கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் மனிதர்களின் பற்கள் தடம் பதிந்துள்ளது. கிரீஸில் மஸ்டிக் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட ரெசினை சூயிங்கமாக மெல்வது அன்று தாடைகளுக்கான பயிற்சியாக இருந்திருக்கிறது.

இவர்களை வழிமொழிந்த மயன், அஸ்டெக் இனக்குழுவினர், சபோடில்லா மரத்திலிருந்து எடுத்த பசையை மென்று வந்தனர். கிரீஸில் மாஸ்டிக் எனும் மரப்பிசினும், மாயன் நாகரிகத்தில் சிக்லி என்ற மரப்பட்டையும், சீனத்தில் ஜின்செங் என்ற செடியின் வேரும், எஸ்கிமோக்களிடையே ப்ளப்பர் என்ற தாவரமும், தென் அமெரிக்கர்கள் கோகோ இலைகளையும் இந்தி யாவில் வெற்றிலை விதைகளும் ஒரு காலத்தில் சூயிங்கம் போல் மெல்லப்பட்டிருக்கின்றன.

ஜிஸிலி எனப்படும் பசையைத் திருமணமான பெண் அல்லது விதவை  ஒருவர் பொது இடத்தில் மென்றால் அவர் விபச்சாரி என்றும், ஆணாக இருந்தால் ஓரினச்சேர்க்கையாளர் எனவும்  முடிவு கட்டுவது  அன்றைய  வழக்கம் என்கிறார் Unwrapping the History of Chewing Gum என்ற நூலின் எழுத்தாளரான லூயிஸ் வெர்னர்.  

மெக்சிகோவில் சிக்கில்  என்னும் பசையை வேகவைத்து பக்குவப்படுத்தி மென்று வந்தனர். பின்னாளில்  இதனை 19 ஆம் நூற்றாண்டில்  அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தியவர்  மெக்சிகன் ஜெனரலான சான்டா அன்னா. டயர்களுக்கு பயன்படும் ரப்பரும் சூயிங்கம்மில் முதலில் சேர்க்கப்பட்டு, பின் அதற்கு பதிலாக அதில் வெந்நீர் சேர்க்கப்பட்டு உருண்டை வடிவில் விற்பனை செய்யப்பட்டது.

சூயிங்கத்தை அக்காலத்தில் பெண்கள் மெல்லுவது தடை செய்யப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களிடமிருந்து சூயிங்கம் மெல்லும் பழக்கம் உலகம்  முழுக்க  பரவத்தொடங்கியது. பாலிவினைல் அசிட்டேட், பாலிமர், ரெசின் ஆகிய வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுவதால்தான் இவை ஒட்டும் தன்மையும் நெகிழ்வும் பெறுகின்றன. என்றாவது ஒருநாள் சூயிங்கம் மெல்வது தவறு இல்லை. எப்போதும் மென்றுகொண்டிருப்பது ஆபத்து என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஃபுட் மித்ஸ்

சளிப் பிடித்திருக்கும்போது பழங்கள் சாப்பிடுவது, இளநீர் குடிப்பது சளியை அதிகரிக்கும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இதில் அவ்வளவாக உண்மை இல்லை. இளநீரிலோ பழங்களிலோ சளியை அதிகரிக்கச் செய்யும் எந்த உட்பொருளும் இல்லை. சொல்லப்போனால் சளியால் உடல் துவண்டு வலுவற்று இருக்கும் போது இளநீரோ பழசாறோ பருகுவது நல்லதுதான். அதிக இனிப்பில்லாத பழங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகியவற்றில் வைட்டமின் சி உள்ளது. இது சளிக்கு எதிரானது. மழை காலத்தில் வாரம் இரண்டு மூன்று நெல்லிக்காயை மென்று வந்தால் சளியே பிடிக்காது. பொதுவாக, நீராகாரங்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால் மூக்கில் சளி ஒழுகுவதும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த எண்ணம் உருவாகியிருக்க வேண்டும்.

இளங்கோ கிருஷ்ணன்

Tags :
× RELATED லிஸி வெலாஸ்கோவெஸ்