மீண்டும் விரட்டும் கொரோனா மாணவர்களின் கல்வி என்ன ஆகும்? ஆன்லைன் சுரைக்காய் கறிக்கு உதவுமா?

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகையே புரட்டிப் போட்டுவரும் கொரோனாவால் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவைகளில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதேபோல், கல்வித்துறையும் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தாக்கத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டது. மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் திடீர் ஆன்லைன் கல்வி திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் பெரும் சவாலை சந்தித்தனர். ஆன்ட்ராய்டு செல்போனும், இணைய வசதியும் இல்லாத மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

ஒருபுறம் மாணவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்தாலும் மறுபுறம் ஆன்லைன் கல்வி என்பது ஒரு ஒப்புக்கு நடத்துவது போன்று தான் இருந்தது. ஆன்லைன் கல்வியால் மாணவர்களின் நலன், கல்வியறிவு, சிந்திக்கும் திறன், உடல்நலன் ஆகியவை பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஆன்லைன் கல்வி முறையானது அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே ஒரு பாகுபாட்டையும் ஏற்படுத்துவதாக இருந்தது. கொரோனா கொடுங்காலத்தில் உணவிற்கே வழி இல்லாமல் திண்டாடிய பெற்றோர்களிடம் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் செலுத்தக்கோரி வற்புறுத்தியதையும் கடந்த ஆண்டு காண முடிந்தது. இதனால், பல லட்சக்கணக்கான மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் அரசு பள்ளிகளுக்கு மாற்றினர். இந்நிலையில், கட்டாய ஆன்லைன் கல்வி என்ற நடைமுறையை தமிழக அரசு மாற்றியது. இதேபோல், ஆன்லைன் கல்வி முறையே தவறு என்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சரிவர திட்டமிடப்படாத ஆன்லைன் கல்வி முறையால் 90 சதவீத மாணவர்களுக்கு தான் என்ன படித்தோம் என்பதே மறந்துவிட்டது.

கொரோனா பாதிப்பு குறைந்து வந்தபோது 2021 ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகளை மூட கடந்த மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதேபோல், அடுத்த கல்வியாண்டிலும் ஆன்லைன் வழிக்கல்வியே நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  தமிழக அரசின் இந்த அறிவிப்பினால் தனியார் பள்ளிகள் மீண்டும் பெற்றோர்களிடம் ஆன்லைன் கல்வி கட்டணத்தை வசூலிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, 6 மாதம் மற்றும் ஓராண்டு கல்விக்கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த கூறியுள்ளதாக பெற்றோர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் மன அழுத்தம், கண் பார்வை பாதிப்பு, உடல்நலக்கோளாறு போன்ற பிரச்னைகளை தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில் மீண்டும் ஆன்லைன் கல்வி என்பது மாணவர்களின் கல்வி அறிவை கேள்விக்குறியாக்கி விடும் என சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமி கூறியதாவது: தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களிடம் இருந்து பணம் வசூலிக்க கண்டுபிடித்ததுதான் ஆன்லைன் வழிக்கல்வி. இதை அரசு ஆதரித்தது. ஆன்லைன் கல்வி முறை அனைவருக்கும் சென்றடையாது என ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். குக்கிராமங்களில் மின்சாரம், இணையதள வசதி என்பது கிடையாது. கடந்த ஆண்டு எத்தனையோ மாணவர்கள் செல்போன் வசதி இல்லாததால் தற்கொலை செய்துகொண்டதை காண முடிந்தது.

24 மணி நேரம் மின்சாரமும் இருப்பதில்லை. இதனாலும் கல்வி தொலைக்காட்சியும் மாணவர்களிடம் சென்று சேரவில்லை. கல்வித் தொலைக்காட்சி மாணவர்களிடம் சரிவர சென்றடையவில்லை என்பதை முதல்வரே சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டார். 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் போடப்போகிறோம் என்று இதுவரையில் அரசு தெரிவிக்கவில்லை. கல்வித்துறை என்பது கல்வி குழப்ப துறையாகத்தான் இருக்கிறது. ஆன்லைன் வழி கல்வியால் மாணவர்களின் தலையில் கத்தி தொங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது. மொத்தம் 1.6 கோடி மாணவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். இவர்களில் 20 சதவீதம் பேருக்கு கூட ஆன்லைன் வழிக்கல்வி சென்றடையவில்லை. உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மாணவர்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாவார்கள். தொடர் ஆன்லைன் வழிக்கல்வி மூலம் மாணவர்களின் கண் பார்வை பாதிக்கப்படும் ஆன்லைன் தேர்வு மூலம் ஒரு நம்பிக்கை ஏற்படாது. மாணவர்களின் அடிப்படை கல்வி அறிவை இது மிகவும் பாதிக்கும்.

அனைத்து மாணவர்களுக்கும் டிஜிட்டல் சேவை என்பது சென்றடையாமல் ஆன்லைன் வழிக்கல்வியால் பயனில்லை. பெரும்பாலான மாணவர்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து வேலைக்கும் செல்கின்றனர். டிஜிட்டல் சேவையை வலுப்படுத்தும் வரையில் ஆன்லைன் கல்வி முறை என்பது பலனளிக்காது. பல பள்ளிகளில் கழிவறை இல்லை. சுத்தமான தண்ணீர் இல்லை. எனவே, இதை எல்லாம் சரிசெய்த பிறகும், கொரோனா தாக்கம் குறைந்த பிறகுதான் பள்ளிகளை தொடங்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கு பதிலாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களே மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று பாடம் நடத்த வேண்டும். வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் ஆரம்ப கல்வி கூடங்களில் அந்த பகுதி மாணவர்களை அழைத்து பாடம் நடத்த வேண்டும். தன்னார்வலர்கள், சமூக பணியாளர்கள் ஆகியோரை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

குறிப்பாக, ஆன்லைன் வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை கொடுக்க வேண்டும். உடற்பயிற்சியும் மிகவும் அவசியம். இதுகுறித்து, கல்வியாளர்களுடன் அரசு ஆலோசனை நடத்தி வரும் கல்வியாண்டுக்கு சரியான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவிக்க வேண்டும்.

11% பேர் மட்டுமே...

கடந்த ஆண்டு ‘அசெர்’ நடத்திய ஆய்வுப்படி, இந்திய மாணவர்களில் 32.5 சதவீதம் பேர் தான் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றுள்ளனர். அதிலும் 11 சதவீதம் மாணவர்கள் மட்டுமே நேரடியான ஆன்லைன் வகுப்புகளில் தினம்தோறும் பங்கேற்றுள்ளனர். 21.5 சதவீதம் மாணவர்கள் வீடியோ அல்லது பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் மூலமே படித்துள்ளனர்.

உளவியல் ஆலோசனை அவசியம்

ஆன்லைன் வழிக்கல்வியால் ஆசிரியர்-மாணவர் தொடர்பு என்பது இல்லாமல் போய்விட்டது. இதனால், கல்வி ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை தேவைப்படுகிறது. இதனால், சிறப்பு மையங்களை ஏற்படுத்தி அவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் உளவியல் ஆலோசனை கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கணிதம், அறிவியல் பாடங்கள் கற்பதில் சிக்கல்

ஆன்லைன் மூலம் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்கள் கற்றுக்கொள்வதில் கடினம் மிகுந்தவையாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். உரையாடல் மற்றும் தொடர் கவனிப்பு மூலமாக கணித பாடத்தை புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஆன்லைன் வகுப்பால் இது தடைபடுகிறது.

ஆன்லைன் கல்வி கைகொடுக்கவில்லை

ஆன்லைன் கல்வி மாணவர்களுக்கு பலனை கொடுத்ததா இல்லை மன அழுத்தத்தை கொடுத்ததா என்பது குறித்து பல்வேறு கள ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலான ஆய்வுகளில் சரியாக திட்டமிடப்படாத மற்றும் வரையறுக்கப்படாத ஆன்லைன் கல்விமுறை மாணவர்களுக்கு கைகொடுக்கவில்லை என்பதே பதிலாக இருக்கிறது.

தினக்கூலியாக மாறிய மாணவர்கள்

நகர்ப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கே ஆன்லைன் கல்விமுறை இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்தசூழலில் கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளது. இணையதளம், மின்சாரம், கைப்பேசி உள்ளிட்ட எந்த வசதியும் கிடைக்காத மாணவர்கள் படிப்பு என்பதையே மறந்துவிட்டனர். டிவி மூலம் நடத்தப்படும் வகுப்புகளையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தினக்கூலிகளாக பணிசெய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தனியார் பள்ளிகள் கட்டாய பணம் வசூலிப்பு

ஆன்லைன் வழிக்கல்வி மூலம் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தவாறு தான் பாடம் நடத்தப்படுகிறது. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் மாணவர்களிடம் இருந்து கட்டண கொள்ளை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. மாணவர்கள் பயன்படுத்தாத வேதியியல் ஆய்வு வகுப்பறை, நூலகம், கணினி ஆய்வு வகுப்பறை ஆகியற்றையும் சேர்த்து கட்டணத்தில் பணம் வாங்குவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கண் பாதிப்பு

கடந்த ஓராண்டுக்கு மேலும் மாணவர்கள் ஆன்லைன் வழிக்கல்வியை கற்று வருகின்றனர். இதனால், 40 சதவீதம் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு முதல் முதியவர்கள், இளம் வயதினர், பெண்களை காட்டிலும் பள்ளி மாணவர்கள்தான் கண் மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.

Related Stories:

>