×

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் மரணம்: போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம் : தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

* 2009ம் ஆண்டு திரைத்துறைக்கு விவேக் ஆற்றிய பணியை கருத்தில் கொண்டு பத்ம விருது வழங்கப்பட்டது.
* அப்துல் கலாம் வழிகாட்டுதலின் கீழ் விவேக் ‘கிரீன் கலாம்’ என்ற அமைப்பை தொடங்கினார்.
* இறுதிசடங்குகளை விவேக்கின் இளைய மகள் தேஜஸ்வினி செய்தார்.

சென்னை: மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் (59) நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல், 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 1987ல் மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகம் ஆனவர் விவேக். தொடர்ந்து, ஒரு வீடு இரு வாசல், புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, ரன், பிரியமானவளே, முகவரி உள்பட 100க்கு மேற்பட்ட படங்களில் நடித்தார். நேற்று முன்தினம் காலை சென்னை விருகம்பாக்கத்திலுள்ள வீட்டில் குடும்பத்தினருடன் விவேக் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். மருத்துவமனைக்கு வரும் போதே சுயநினைவு  அற்ற நிலையில்தான் அனுமதிக்கப்பட்டார்.

இதயக்குழாயில் 100 சதவீத அடைப்பு  இருந்தது. அதை ஆஞ்சியோ சிகிச்சை மூலம் டாக்டர்கள் நீக்கினர். இதற்கிடையில் மூளைக்கு செல்லும்  ரத்தத்தின் அளவு அவருக்கு குறைந்தது. எக்மோ கருவி மூலம் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை  அளித்து வந்தனர். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இன்னும் 24 மணி  நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனையிலிருந்து விருகம்பாக்கத்திலுள்ள வீட்டிற்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி,  விஜய் சேதுபதி, சத்யராஜ், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராதிகா, அருண் விஜய்,  கவுண்டமணி, யோகி பாபு, சூரி, பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், சார்லி,  எம்.எஸ்.பாஸ்கர், பரத், ராஜேஷ், கருணாகரன், வையாபுரி, நட்ராஜ், மன்சூர்  அலிகான், தாமு, மயில்சாமி, தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், நடிகைகள் ஜோதிகா, திரிஷா, இயக்குனர் ஷங்கர்,  பாடலாசிரியர்கள் வைரமுத்து, சினேகன் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி  செலுத்தினர்.

திமுக இளைஞரணி ெசயலாளர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி,  ஆ.ராசா, மா.சுப்பிரமணியன், பூச்சி முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமைச்சர் ஜெயக்குமார், தேமுதிக சார்பில் பிரேமலதா,  சுதீஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் காவல்துறை மரியாதையுடன் விவேக்கிற்கு இறுதிசடங்கு நடத்த தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கோரியது. இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. நேற்று மாலை வீட்டிலிருந்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். இதில் பலர் மரக்கன்றுகளுடன் வந்தனர். பின்னர் அவரது உடல், விருகம்பாக்கத்திலுள்ள மின்மயானத்துக்கு கொண்டு வரப்பட்டது. மின்மயானத்துக்குள் ரசிகர்கள் ஏராளமானோர் நுழைந்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் இறுதிசடங்குகளை விவேக்கின் இளைய மகள் தேஜஸ்வினி செய்தார். அதையடுத்து 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

விவேக்கிற்கு மனைவி அருள்செல்வி, மகள்கள் அம்ரிதா நந்தினி, தேஜஸ்வினி உள்ளனர். மகன் பிரசன்ன குமார் கடந்த 2015ல் மூளை காய்ச்சல் நோய் காரணமாக 13வது வயதில் இறந்தார். 2009ம் ஆண்டு திரைத்துறைக்கு விவேக் ஆற்றிய பணியை கருத்தில் கொண்டு பத்மவிருது வழங்கப்பட்டது. அப்போதைய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் இந்த விருதை அவருக்கு வழங்கினார். 2006ல் கலைவாணர் விருது பெற்றார். தொடர்ந்து படங்களில் சமூக கருத்துகளை கூறியதால் இந்த விருது அவருக்கு கிடைத்தது. 1999,   2002, 2003, 2005, 2007ம் ஆண்டுகளில் வெளியான உன்னருகே நான் இருப்பேன்,   ரன், அந்நியன், சிவாஜி உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான   தமிழக அரசின் விருதுகளை தொடர்ந்து பெற்றார். 2002, 2003, 2004ம் ஆண்டுகளில் வெளியான ரன், சாமி, பேரழகன் படங்களில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

மறைந்த இந்திய  முன்னாள் ஜனாதிபதி  ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வழிகாட்டுதலின் கீழ் விவேக்  ‘கிரீன் கலாம்’ என்ற  அமைப்பை தொடங்கினார். ‘கிரீன் குளோப் திட்டம்’ மூலம்  புவி  வெப்பமடைதலுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்தார். இது மாநிலம்   முழுவதும் மில்லியன் மரங்களை நடும் நோக்கத்தை கொண்டதாகும். அதன்படி தமிழகம் முழுவதும் மரம் நடும் திட்டங்களை விவேக் செயல்படுத்தினார். மேலும் தமிழக அரசின்   ‘பிளாஸ்டிக் இல்லாத தமிழகம்’ பிரசாரத்திற்கான தூதராக விவேக் மற்றும்   நடிகை ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Tags : Vivek , Actor Vivek dies after being treated at hospital: Body cremated with police honors
× RELATED தினசரி ரயிலாக இயக்க வாய்ப்புள்ள...