×

ரயில் நிலையங்களில் பயணிகள் மாஸ்க் அணியாவிட்டால் 500 அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

சென்னை: ரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அப்போது பயணிகள் ரயில் சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று குறைய தொடங்கிய நாள் முதல் கொஞ்சம், கொஞ்சமாக பல்வேறு கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது வரை சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒரு சில ரயில்களை தவிர அனைத்து ரயில்களும் முன்பதிவு இருக்கைகளுடன் மட்டுமே இயக்கப்படுகிறது. ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை கட்டுப்படுத்த கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைமேடை கட்டணம் ரூ.10ல் இருந்து ₹50ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

 தினசரி 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனாவை கட்டுப்படுத்த தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளிடையே முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு 500 அபராத விதிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறித்துள்ளது.

அதன்படி தெற்கு ரயில்வேக்குட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில்வே விதிப்படி இந்த அபராத  நடவடிக்கை உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலும், ரயில்களில் பயணிக்கும் போது பயணிகள் மாஸ்க் அணியவில்லை என்றால் ₹500 அபராதம் வசூலிக்கப்படும். இந்த அபராதத்தை ரயில் நிலைய மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே நிர்வாகத்தால் அங்கீகாரம் பெற்ற அதிகாரிகள் ஆகியோரால் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் 500
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றன. இதனால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். அடிக்கடி கை கழுவ வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் அதையும் மீறி பலர் மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றுவதால்தான் கொரோனா வேகமாக பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஒவ்வொரு மாநிலமும் மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றுவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 200 அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் அன்டை மாநிலமான கர்நாடகாவில் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், 2வது முறை சிக்கினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. உத்திரப்பிரதேசத்திலும் ’10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தமிழகத்திலும் அபராதத்  தொகையை அதிகரிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னக ரயில்வே விதித்துள்ளது போல், தமிழக அரசும் ₹500 அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Tags : Southern Railway , 500 fine if passengers do not wear masks at railway stations: Southern Railway warning
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்