டெல்லி போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு ஒரு ஏக்கரில் நினைவிடம்: ராஷ்டிரிய லோக் தளம் அறிவிப்பு

லக்னோ: டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கரில் நினைவிடம் அமைக்க இருப்பதாக ராஷ்டிரிய லோக் தளம் கட்சி அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மாநில சட்டப்பேரவை காலம் அடுத்தாண்டு மே 14ம் தேதியுடன் நிறைவடைவதால், அடுத்தாண்டு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்காக நினைவிடம் அமைக்க இருப்பதாக ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் துணை தலைவர் ஜெயந்த் சவுத்ரி கூறுகையில், ‘‘கடந்த 141 நாட்கள் போராட்டத்தில், 350க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். வேளாண்மையை காப்பதற்காக விவசாயிகள் பாடுபட்டதை அடுத்த தலைமுறையினர் நினைவு கூறவும், மீரட் நகரில் ஒரு ஏக்கர் பரப்பளவில், உயிரிழந்த விவசாயிகளுக்கு எங்கள் கட்சி சார்பில் நினைவிடம் அமைக்கப்படும். இது கட்சியின் தலைமை அலுவலகம் கட்டுவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இடமாகும்,’’ என்றார்.

* நடிகர் தீப் சித்து மீண்டும் கைது  

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது, டெல்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்து தேசியக்கொடியை அகற்றிய விவகாரத்தில், நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்து, கடந்த பிப்ரவரி 9ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நேற்று ஜாமீன் வழங்கியது. சிறிது நேரத்தில், பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக, தொல்லியல் துறை அளித்த புகாரின் அடிப்படையில் அவர் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

Related Stories: