மதுக்கடைகளை எதிர்த்து போராட உரிமை உள்ளது: ஐகோர்ட் அதிரடி

சென்னை: சேலம் மாவட்டம் கருமலைக்கூடல்  பகுதியில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த டாஸ்மாக் கடை மீது பெண்கள் கல்லெறிந்து தாக்கியுள்ளனர். இதுபற்றி கடையின் விற்பனையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயக்குமார் என்பவர் 7வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: அந்த பகுதியில் டாஸ்மாக் கடையை அமைப்பதற்கு அதே பகுதியை சேர்ந்த 10 பெண்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இந்த பெண்கள் தங்கள் குடிகார கணவர்களால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் கோரியபடி கடையை ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் தயாராக இல்லாததால் கடை மீது கற்களை வீசியுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுபவர்கள் தற்போது பொது ஊழியர்கள்தான். இதனால், தாக்குதல் நடத்திய 10 பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுக்கடைகளை அமைப்பது அரசின் கொள்கை முடிவுதான். அதே நேரத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளால் பாதிக்கப்படும் மக்கள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட சம உரிமை உள்ளது. இந்த வழக்கில் ஆட்சேபனைக்குரிய இடத்தில் மதுக்கடை அமைக்கப்பட்டதால் அதை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து, உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையும் அதிவேகத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்திய தண்டனை சட்டம் அத்தியாயம் 4 பிரிவு 95ல் தரப்பட்டுள்ள மிகச்சிறிய குற்றத்தை செய்ததற்கான விதிவிலக்கிற்குள் வருகிறார்கள். பொது விதிவிலக்கிற்குள் வரும் செயல்களை குற்றமாக கருத முடியாது. எனவே, மனுதாரர் உள்ளிட்ட அனைவர் மீதும் கருமலைக்கூடல் போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

Related Stories: