அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் 4 பேர் சீக்கியர்கள்: 3 பேர் வயதான பெண்கள்

இன்டியானாபோலிஸ்: அமெரிக்காவின் இன்டியானாபோலிஸ் நகரில் வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான 8 பேரில், 4 பேர் சீக்கியர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகளவில் பரவி வருகிறது. தனிப்பட்ட கோபங்களால் பாதிக்கப்படும் நபர்கள், பொது இடங்களுக்கு துப்பாக்கியை எடுத்து வந்து அப்பாவி மக்களை சுட்டுக் கொல்லும் அவலம் அடிக்கடி நடக்கிறது. இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, துப்பாக்கி பயன்படுத்துவதை தடை செய்வதற்கான புதிய சட்ட நடவடிக்கைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்டியானாபோலிஸ் நகரில் பெடக்ஸ் கூரியர் நிறுவன வளாகத்தில் 18 வயதே நிரம்பிய வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட 8 பேரில் 3 பெண்கள் உள்பட 4 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர்கள் என தெரிய வந்துள்ளது. அமர்ஜித் ஜோகல் (66), ஜஸ்விந்தர் கவுர் (64), அமர்ஜித் ஸ்கோன் (48) என்ற 3 பெண்களும், ஜஸ்வீந்தர் சிங் (68) ஆணும் இந்த தாக்குதலில் இறந்துள்ளனர். இவர்களில் ஒருவர் கடந்த மாதம்தான் வேலையில் சேர்ந்து, முதல் மாத சம்பளத்தை பெற இருந்தார். மற்றொ ருவர் வேலையில் சேர்ந்து 6 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. அமெரிக்காவில் சீக்கியவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. நேற்று முன்தினம் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டால், அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது.

* ஷாப்பிங் போகவும் பயமாக இருக்கிறது

கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகையில், ``அமெரிக்காவில் சீக்கிய சமூகம் உயிர் வாழ அஞ்சுகிறது. பிரார்த்தனை, ஷாப்பிங் சென்றால் எந்த நேரம் என்ன நேரிடுமோ என்று பயந்து வாழ வேண்டி இருக்கிறது. சமீப காலமாக சீக்கிய சமூகத்தினர் மிகவும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்,’’ என்றனர்.

Related Stories: