கிருஷ்ணரை மட்டும் ஓவியமாக வரையும் முஸ்லிம் இளம்பெண்: குருவாயூர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்குகிறார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெஸ்னா சலீம். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. 5 வருடங்களுக்கு முன் இவர் 2வது முறையாக கர்ப்பிணியாகி இருந்தார். அப்போது, வீட்டில் வைத்து வழுக்கி விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால், வீட்டில் இவர் முழு ஓய்வில் இருந்தார். அப்போது இவரது வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் ஒரு அறையில் பழைய பொருட்கள் குவித்து  வைக்கப்பட்டிருந்தன.

தற்செயலாக அந்த அறைக்கு சென்றபோது ஒரு பழைய காகிதம் சுருட்டி வீசப்பட்ட நிலையில் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் கிருஷ்ணனின் ஒரு ஓவியம் இருந்தது. அதை பார்த்ததும் ஜெஸ்னாவுக்கும் கிருஷ்ணனின் படத்தை ஓவியமாக வரைய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. பிறகு தான் ஜெஸ்னா கிருஷ்ணனின் ஓவியத்தை கண்ணாடியில் வரையத் தொடங்கினார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவர், கிருஷ்ணனின் ஓவியங்கள் வரைவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. இது குறித்து அறிந்த கேரள பாஜ முன்னாள் மாநிலத் தலைவரான கும்மனம் ராஜசேகரன், ஜெஸ்னாவை சந்தித்து கிருஷ்ணனின் ஒரு ஓவியத்தை வாங்கி பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார்.

ஜெஸ்னா கடந்த சில வருடங்களாக சித்திரை விஷு தினத்தன்று குருவாயூர் கோவிலுக்கு சென்று, தான் வரைந்த கிருஷ்ணனின் ஓவியத்தை காணிக்கையாக வழங்கி வருகிறார். இந்த வருடமும் தன்னுடைய ஓவியத்தை காணிக்கையாக வழங்கினார். இது குறித்து ஜெஸ்னா கூறுகையில், ‘‘கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கிருஷ்ணனின் படங்களை மட்டுமே ஓவியமாக வரைகிறேன். எனக்கு முதலில் இந்தியாவின் வரைபடத்தை கூட ஒழுங்காக வரையத் தெரியாது. இந்தத்  திறமை எப்படி வந்தது என்று எனக்கு இதுவரை புரியவில்லை. முஸ்லிம் மதத்தை சேர்ந்த நான் கிருஷ்ணனின் படங்களை வரைவதற்கு தொடக்கத்தில் பல எதிர்ப்புகள் வந்தன. பின்னர் அவை அடங்கிப் போனது,’’ என்றார்.

Related Stories:

>