ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெற இருந்த கும்பமேளா பாதியில் நிறுத்தம்: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று சாதுக்கள் அமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: ஹரித்துவார் கும்பமேளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், விழாவை பெயரளவில் நடத்த வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார். அதை ஏற்று, வரும் 30ம் தேதி வரை நடக்க இருந்த கும்பமேளாவை பாதியில் நிறுத்துவதாக சாதுக்கள் அமைப்பு நேற்று அறிவித்தது. உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறும். இந்த கும்பமேளாவுக்கு உலகெங்கிலும் இருந்தும் லட்சக்கணக்கானோர் வருகை தருவார்கள். குறிப்பாக, அகோரிகள், நாக சாதுக்கள், சாமியார்கள், துறவிகள், சன்னியாசிகள் கும்பமேளாவில் புனித நீராடி கடவுளை வணங்கி செல்வர்.

இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கும்பமேளா 30 நாட்கள் மட்டும் நடத்த அகாராக்கள் முடிவு செய்தன. அதன்படி, கடந்த 1ம் தேதி விழா தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்தது. ஆனால், கும்பமேளாவுக்கு வந்தவர்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட எந்த பாதுகாப்பு நடவடிக்கையையும் பின்பற்றவில்லை. லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி புனித நீராடினர். இந்த ஆண்டு மொத்தம் 4 புனித நீராடல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, 3 நீராடல்கள் முடிந்துள்ளன. 4வது புனித நீராடல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, 48 லட்சத்துக்கும் அதிகமாக புனித நீராடிய பக்தர்களில் 30 சாதுக்கள் உள்பட 2,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஹரித்வார், கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியது. கும்பமேளாவில் பங்கேற்று திரும்புபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென பல மாநில அரசுகள் உத்தரவிட்டன. மேலும், மத்தியப் பிரதேச மகா நிர்வானி அகாராவின் தலைவர் கபில் தேவ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, 13 அகாராக்களில் ஒன்றான நிரஞ்சனி அகாரா கும்பமேளாவை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

இந்நிலையில், கும்பமேளாவை தலைமையேற்று நடத்தி வரும் சுவாமி அவ்தேஷானந்த்துடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது அவர், ‘பக்தர்களுக்கும், சாதுக்களுக்கும் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அவர்களின் மூலமாக, இந்த நோய் மேலும் பல ஆயிரம் பேருக்கு தொற்றும் அபாயம் இருப்பதால், கும்பமேளாவை அதிகளவில் பக்தர்கள் கூடாமல் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும்,’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஏற்றுக் கொண்ட ஜூனா அகாராவின் தலைமை குருவான சுவாமி அவ்தேஷானந்த் கிரி, ‘இந்திய மக்களின் பாதுகாப்பே எங்களின் முதல் முன்னுரிமை. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, கும்பமேளாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்கிறோம்’ என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஹரித்துவாரில் பக்தர்கள், சாதுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Related Stories: