குதிரை பேரத்துக்கு அஞ்சி ஜெய்ப்பூரில் தங்கியிருந்த அசாம் காங். வேட்பாளர்கள் திருப்பி அனுப்பிவைப்பு: 14 நாட்கள் தனிமைப்படுத்தும் விதிகளால் திடீர் முடிவு

ஜெய்ப்பூர்: குதிரை பேரத்துக்கு அஞ்சி ஜெய்ப்பூரில் தங்கியிருந்த அசாம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மீண்டும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் விதிகளால் திரும்பி உள்ளனர். அசாம் மாநில பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி இடையே போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் பட்ருதீன் ஜமால் என்பவரின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அஞ்சலிக் ஞான மோட்சா, ராஷ்டிரிய ஜனதா தளம், போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி இடம்பெற்றுள்ளன.

அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வோம் என்று பாஜக நம்பிக்கையில் உள்ளது. ஆனால், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிடுவோம் என்று காங்கிரஸ் நம்பிக்கையில் உள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் பல நாட்கள் உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் பாஜக தற்போதே குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதனால், அசாமில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட 30க்கும் வேட்பாளர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனியார் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜெய்ப்பூர் ஓட்டலில் 7 நாட்கள் தங்கியிருந்த வேட்பாளர்கள் மீண்டும் அசாமுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் புறப்படுவதற்கு முன்பாக, முதல்வர் அசோக் கெலாட் தனது இல்லத்தில் அனைத்து வேட்பாளர்களையும் சந்தித்து ஆலோசனைகளை கூறினார். அனைத்து வேட்பாளர்களும் மே 2ம் ேததி வரை (வாக்கு எண்ணிக்கை நாள்) ஒற்றுமையை கடைபிடிக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். ராஜஸ்தானில் தங்க வைக்கப்பட்டவர்கள் மீண்டும் அசாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்து, அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், ‘கொரோனா தொற்று கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் அசாமுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

வருகிற மே 2ம் தேதி அசாமில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளின்படி அதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அதனால், முன்கூட்டியே அசாம் மாநிலம் கவுகாத்தி திரும்புகின்றனர். ஜெய்ப்பூரில் ஏழு நாட்கள் அவர்கள் தங்கியிருந்த போது, பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்’ என்றனர்.

Related Stories: