தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படையச் செய்தவர்: நடிகர் விவேக்கிற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம்

டெல்லி: தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படையச் செய்தவர் என நடிகர் விவேக்கிற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மயங்கி விழுந்தார். இதனால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  சுயநினைவு இல்லாத நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில்  சிகிச்சையளிக்கப்பட்டது. அப்போது ரத்த நாளத்தில் 100% எல்ஏடியில்  அடைப்பு உள்ளதை ஆஞ்சியோ பிளாஸ்ட்டி செய்து சரி செய்தனர். அந்த சிகிச்சை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

எக்மோ கருவி உதவியுடன்  மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். நேற்று மாலையில் நிருபர்களை சந்தித்த டாக்டர்கள், 24 மணி நேரம் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார். அதற்கு பின்னர்தான் அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும். அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். அதேநேரத்தில் நேற்று முன்தினம் அவர் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டார். இந்த தடுப்பு மருந்துக்கும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை. உடல்நிலையை அவர் கவனிக்காமல் இருந்துள்ளார் என்று தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர்  உயிரிழந்தார்.

பிறகு அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு  எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல்  கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு  உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மேலும் நடிகர் விவேக் மரணத்துக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றேன். அவரது நடிப்பின் அற்புதமான திறமை அவரை மிகச்சிறந்த நடிகராக்கியது. தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர். அதற்காக எப்போதும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்.

 ஓம்சாந்தி என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; சமயோசித நகைச்சுவை உணர்வுக்கும் புத்திசாலித்தனமான வசனங்களுக்கும் சொந்தக்காரர் விவேக். தனது நகைச்சுவையால் ஏராளமான மக்களை மகிழ்வித்தவர் நடிகர் விவேக். தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரைப்படங்களிலும் சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்திவர் விவேக். விவேக்கின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: