கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை அறிவிப்பு: செய்முறை தேர்வுக்கு மட்டும் வந்து செல்ல அறிவுறுத்தல்

சேலம்: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வீட்டிலிருந்தபடி தேர்வுக்கு தயராக, பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் செய்முறை தேர்வுக்காக மட்டும் வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் 2வது அலையாக உருவெடுத்து, வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு ஆளாகி வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், பிளஸ் 2 பொதுத்தேர்வை திட்ட மிட்டபடி நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று மாநிலம் முழுவதும் தொடங்கியது. இதனிடையே, கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், செய்முறை தேர்வு நாளன்று மட்டும், சம்பந்தப்பட்ட பிளஸ் 2 மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதர நாட்களில், வீட்டிலிருந்தபடியே அவர்கள் பொதுத்தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 செய்முறை தேர்வு மேற்ெகாள்ளும் மாணவர்கள் தவிர, பிற பிரிவு மாணவர்கள், வீட்டிலிருந்தபடியே பொதுத்தேர்விற்கு தயார் செய்திடும் வகையில், தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், செய்முறை தேர்வெழுதும் ஒவ்வொரு பிரிவு மாணவர்களுக்கும் அவர்களின் கடைசி செய்முறை தேர்வுக்கு அடுத்த நாள் முதல், தேர்வு விடுமுறை வழங்கப்படும். ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று (17ம் தேதி) வழக்கம்போல செய்முறை தேர்வு நடக்கிறது.பொதுத்தேர்வுக்கு முன்னதாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்படுவதாக இருந்த இரண்டாம் திருப்புதல் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான வினாத்தாள்களை அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக வழங்கி, மாணவர்கள் தங்களது வீட்டிலேயே பொதுத்தேர்விற்கு தயார் செய்து கொள்ள அறிவுறுத்தும்படி, தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆசிரியர்களுக்காக, பள்ளிகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே செயல்படும். சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் களுக்கான வொர்க்புக் மற்றும் பிரிட்ஜ் கோர்ஸ் புத்தகங்களை உடனடியாக வழங்க, தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: