செக்ஸ் உணர்ச்சி தவறா?

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

என்ன செய்வது தோழி?

அன்புத் தோழி, எப்படி சொல்வது என்று தெரியவில்லை. என்னை தவறாக நினைக்க வேண்டாம். யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து வந்தேன். இப்போது குங்குமம் தோழி எனக்கு கை கொடுப்பாள் என நம்பிதான் இதை எழுதுகிறேன்.

எனக்கு 39 வயது. நான், கணவர், 2 ஆண் பிள்ளைகள். அவர்கள்  11, 9ம் வகுப்பு படிக்கிறார்கள். மாநகருக்கு வெளியே தோட்டத்துடன் சொந்த வீடு... மகிழ்ச்சியான குடும்பம்... ஆம் அப்படித்தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.  வேண்டுமானால் என்னை தவிர.... சொல்லலாம்.

என் கணவர் ஆரம்பத்தில் என்னிடம் அன்பாக இருந்தார். குழந்தைகள் வளர வளர என்னிடம் இருந்து விலக ஆரம்பித்தார். ஆரம்பத்தில் எனக்கு அது நியாயமாக தோன்றியது. பிள்ளைகள் பெரியவர்கள் ஆகிறார்கள், அதனால் கட்டுப்பாடாக இருந்தால் நல்லது தானே என்று நினைத்தேன்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக என் உணர்வுகள் எல்லை மீறி போகிறது. அவருடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் பிள்ளைகள் நடுவில் படுக்க ஆளுக்கு ஒருபுறம் படுக்கிறோம். பிள்ளைகள் இல்லாத போது  வெட்கத்தை விட்டு நான் முயற்சி செய்தாலும் அவர் விலகிப் போகிறார்.

கேட்டால், ‘‘வீடு கட்டிய லோன் இன்னும் முடியவில்லை. பிள்ளைகள் அடுத்தடுத்து கல்லூரிக்கு செல்ல தயாராக இருக்கிறார்கள். அதற்கு வேற பணம் சேர்க்க வேண்டும். என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன். நீ என்னடாவென்றால் ‘எப்போ படுக்கலாம்’னு பறக்குறே’’ என்று கொச்சையாக பேசுகிறார்.

அதை கேட்கும்போது எனக்கு அவமானமாக இருக்கும். குடும்பம், பிள்ளைகள் குறித்து கவலைப்படாமல் என் உடம்பு சுகத்துக்கு முக்கியத்துவம் தருகிறேனே என்று எனக்கு என்மீதே வெறுப்பாக இருக்கிறது. ஆனால் அது சில நாட்கள்தான். மறுபடியும் எனக்கு அந்த உணர்வு வந்து விடுகிறது. நான் என்ன செய்வது? நானும் மனுஷி தானே? எனக்கு செக்ஸ் உணர்ச்சி இருப்பது தவறா?  கணவரிடம் தானே கேட்கிறேன்? இதிலிருந்து வெளிப்பட, என்னை கட்டுப்படுத்திக் கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா? தயவு செய்து என்னை மீட்டெடுக்க வழிச் சொல்லுங்கள்.

இப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,உங்கள் கடிதத்தை படிக்கும் போது உங்களுக்கு இருக்கும் உணர்வு அதீத, தேவையற்ற உணர்வல்ல.  உங்கள் வயதுக்கு அது இயல்பானதுதான். தவறில்லை. உங்கள் கணவர் ஆரம்பத்தில் அன்பாக இருந்திருக்கிறார். இப்போது ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்தால்தான் அதனை சரி செய்ய முடியும்.

வீட்டுக்கடன், பிள்ளைகளின் படிப்பு என பணம் சார்ந்த பிரச்னைகள் அவருக்கு செக்சில் ஆர்வம் இல்லாமல் ேபானதற்கு காரணமாக இருக்கலாம். இல்லை வேறு காரணங்கள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வது அவசியம். என்ன பிரச்னையில் அவர் தவிக்கிறார்... எதற்காக உங்களை தவிர்க்கிறார் என்பதையும் அறிய வேண்டும். வேற தொடர்புகள் இருக்கிறதா என்பதையும் விசாரியுங்கள்.

பிரச்னைகளை தெரிந்து கொண்ட பின் அவற்றை குறை சொல்லாமல் அன்பாகவும், ஆதரவாகவும் நடந்து கொள்ள வேண்டும். அந்த அன்பு அரவணைப்பாக மாற வாய்ப்பு உள்ளது. இவையெல்லாம் ஒரே நாளில் தீர்ந்து விடாது. கஷ்டங்களை பேசி பேசிதான் சரி செய்ய வேண்டும். அது மட்டுமல்ல செக்சை தவிர்த்து மற்ற விஷயங்களில் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார். அன்பாக, மரியாதையாக நடத்துகிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும். அவர் உடல் நலம், மன நலம் எப்படி இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்வது நல்லது.

உங்கள் இருவருக்கும் இடையில் அன்பும் நெருக்கமும் அதிகரித்தால்தான் உங்களுக்கு இருக்கும் இயல்பான உணர்வு நியாயமானது என்று அவருக்கு புரிய வைக்க முடியும். அதை  புரிந்து கொண்டால்,  ஒத்துக் கொண்டால்  அவரை கூட மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம். அதன் மூலம் அவர் பிரச்னைகளை சரி செய்யலாம்.

நான் சொல்வதெல்லாம் கேட்பதற்கு எளிதாக இருக்கும். அவற்றை செயல்படுத்துவது சிரமமாக இருக்கலாம். எனவே இவற்றை செயல்படுத்துவதில் நிதானமும், உறுதியும் அவசியம்.  அவர் எந்த விஷயத்தையும் உங்களிடம் பகிரவில்லை என்றாலும் நீங்கள் அவர் மீது எவ்வளவு அன்பு வைத்து இருக்கிறீர்கள் என்பதை அவருக்கு புரிய வையுங்கள். உங்கள் அன்பும், அரவணைப்பும் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர வையுங்கள். எல்லாம் சரியாகும்.

மீண்டும் சொல்கிறேன். உங்களுக்கு இருக்கும் உணர்வு இயல்பானது. எனவே எந்த குற்ற உணர்ச்சியும் தேவையில்லை.  கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமுமில்லை. அப்படி இந்த உணர்வு இயல்புக்கு மீறியதாக உணர்ந்தால், கவலைப்பட்டால்  மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். தவறில்லை.

என்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’

குங்குமம் தோழி,

தபால் பெட்டி எண்: 2924

எண்: 229, கச்சேரி சாலை,

மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

தொகுப்பு: ஜெயா பிள்ளை

Related Stories: