கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மேற்குவங்கத்தில் 5ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறு: மீதமுள்ள 3 கட்ட தேர்தலில் அதிரடி மாற்றங்கள்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 3 கட்ட தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மேற்குவங்க மாநில பேரவையில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 135 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 5ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி டார்ஜிலிங் உட்பட்ட 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில்  வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்,  இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் மொத்தம் 39  பெண்கள் உட்பட 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்றைய வாக்குப்பதிவில் 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வன்முறை அசம்பாவிதங்களை தடுப்பதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படையின் 853 கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருந்தும், பர்த்வான் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தில், பாஜக முகவர் ஒருவரை சரைதிகுரியின் 72வது வாக்குச்சாவடியில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ஏற்பட்ட வன்முறையில் 2 பாஜக முகவர்களின் மண்டை உடைக்கப்பட்டது. காயமடைந்த இவர்களை பர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். வன்முறை சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் பதற்றம் ஏற்பட்டது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டு, பின்னர் அவை சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக நடந்து முடிந்த 4ம் கட்ட வாக்குப்பதிவின்போது சிட்டால்குச்சியில் வன்முறை ஏற்பட்டதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். அத்துடன், மற்றொரு வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர் ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இதனால், இன்று நடைபெறும் 5ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும்நிலையில், மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசார நேரம் இரவு 7 மணியாக குறைக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரவு 7 மணியில் இருந்து காலை 10 மணிவரை எந்த பிரசாரமும் மேற்கொள்ள அனுமதி இல்லை எனவும், வாக்குப்பதிவுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பே பிரசாரங்களை முடித்து கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 6ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கு 22ம் தேதியும், 7ம் கட்டமாக 36 தொகுதிகளுக்கு 26ம் தேதியும், கடைசியாக 8ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு 29ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: