சென்னையில் இன்று சன்ரைசர்ஸ் - மும்பை மோதல்

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 9வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் போராடி தோற்ற நடப்பு சாம்பியன் மும்பை, 2வது போட்டியில் கேகேஆர் அணியை வீழ்த்தியது. முதல்  ஆட்டத்தில் தோற்பதும், அடுத்த ஆட்டத்தில் வெற்றியை சுவைப்பதும் மும்பை அணிக்கு வழக்கமாகிவிட்டது என்றே சொல்லலாம். கேப்டன் ரோகித், சூரியகுமார் நல்ல பார்மில் உள்ளனர். முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய கிறிஸ் லின் 2வது ஆட்டத்தில்  நீக்கப்பட்டு டி காக் சேர்க்கப்பட்டார். ஆனால், அவரது ஆட்டம் கை கொடுக்கவில்லை. டி காக் மட்டுமின்றி... இஷான்,  ஹர்திக், போலார்டு ஆகியோரும் ரன் குவிக்க தடுமாறி வருகின்றனர். 2வது ஆட்டத்தில் கொல்கத்தா சொதப்பியதால் தான், மும்பைக்கு முதல் வெற்றி கிடைத்தது. ராகுல் சாஹரின் பந்துவீச்சும் அதற்கு கை கொடுத்தது.

அதேபோல் முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் போராடி தோற்ற ஐதராபாத், அடுத்து ஆர்சிபி அணிக்கு எதிராக எளிதாக வென்றிருக்க வேண்டிய 2வது ஆட்டத்தையும் அலட்சியத்தால் கை நழுவ விட்டது. இந்நிலையில், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துடன் இன்று நடப்பு சாம்பியனை எதிர்கொள்கிறது. அதற்கு ஏற்ப அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது. பேர்ஸ்டோவும் விக்கெட் கீப்பர் என்பதால், சாஹாவுக்கு ஓய்வு தரவும் வாய்ப்பு உள்ளது.

கேப்டன் வார்னர், மணிஷ், பேர்ஸ்டோ ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். மற்ற பேட்ஸ்மேன்களும் பொறுப்புடன் பங்களித்தால் மும்பைக்கு நெருக்கடி கொடுக்க முடியும். பந்துவீச்சு கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது என்றே சொல்லலாம். வில்லியம்சனுக்கு வாய்ப்பு தராமல் உட்கார வைத்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அணி தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தினால் சன்ரைசர்ஸ் இன்று முதல் வெற்றியை சுவைக்கலாம்.

இதுவரை மோதியதில்...

இரு அணிகளும் 16 ஆட்டங்களில் மோதியுள்ளதில் தலா 8 வெற்றி பெற்று சமநிலை வகிக்கின்றன. 2019ல் நடந்த ஒரு லீக் போட்டியில் சூப்பர் ஓவர் மூலம் மும்பை வென்றது. கடந்த ஆண்டு கடைசியாக மோதிய ஆட்டத்தில் ஐதராபாத் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் மும்பை 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதிகபட்சமாக மும்பை 208 ரன், ஐதராபாத் 178 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்ச ஸ்கோர்: ஐதராபாத் 96 ரன், மும்பை 87 ரன்.

Related Stories:

>