மாற்றத்திற்கான சாதனையாளர் விருதுக்கு மு.க.ஸ்டாலின் தேர்வு: தமிழகத்தின் சமூகநலத்திட்டங்கள் இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கின்றன: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: 2020ம் ஆண்டிற்கான மாற்றத்திற்கான சாதனையாளர் விருதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தின் சமூகநலத்திட்டங்கள் இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்வதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு  ஆண்டுதோறும் “சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்” எனும் விருதை, இன்டராக்டிவ்  ஃபோரம் ஆன் இந்தியன் எகனாமி என்ற அமைப்பு வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி கோவா மாநிலத்தில் நடந்தது. மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி தலைமையில் நடந்த  விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் 2020’ விருது வழங்கப்பட்டது. பின்னர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வீடியோவில் ஒளிபரப்பப்பட்டது.

அப்போது மு.க.ஸ்டாலின் கூறியதாவது: சமூக நலத்திட்டங்களுக்கான “சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் -2020” விருதுக்கு என்னை தேர்வு செய்துள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கியான் சுதா மிஸ்ரா மற்றும் இந்த அமைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாழ்வில் இருப்போருக்கு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றுவது மிக முக்கியக் கடமை. திமுக அரசு அமைந்த போதெல்லாம், பல்வேறு சமூகநல, சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டில் சாதித்துக் காட்டியிருக்கிறது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அடிப்படையில் சமூகநீதிக்கான திட்டங்களை, சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.தமிழகத்தில் உள்ள சமூக நலத்திட்டங்களும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் இன்றைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கின்றன என்பதை இந்த விருது பெறும் நேரத்தில் பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது கூட கொரோனா பேரிடரில் மருந்து, உணவு, அத்தியாவசிய தேவைகள் போன்றவை ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும் wஎன்பதற்காக “ஒன்றிணைவோம் வா” என்ற திட்டத்தை ஒரு இயக்கமாக நடத்தி  மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கிய இயக்கம் திமுக. அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள சமூக, பொருளாதார பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் என்றைக்கும் இந்தியாவின் முன்கள வீரனாகத் தமிழகம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த விருதை, மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன்  சிங், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ்  சிசோடியா உள்ளிட்டோர் கடந்த காலங்களில் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

ஆளுநர் பன்வாரிலாலுக்கு  பிறந்த நாள் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் மீதும்-தமிழக மக்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் பொதுவாழ்வில் போற்றத்தக்க பணியாற்றியவர். அரசியலிலும் - நிர்வாகத்திலும் பழுத்த அனுபவம் கொண்ட அவர், நான் சந்தித்த நேரங்களில் எல்லாம் என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டியவர். அவரது பொதுவாழ்வு மென்மேலும் சிறக்க-ஆரோக்கியத்துடனும், நலமுடனும் பல்லாண்டு வாழ்ந்து - தமிழகத்திற்கும், நம் நாட்டிற்கும் ஆற்றல்மிகுந்த சேவையாற்றிட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: