நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி வேளச்சேரி வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

வேளச்சேரி: தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 6ஆம் தேதி மாலை 7 மணியோடு நடந்து முடிந்தது. இந்நிலையில் இரவு 7.30 மணி அளவில் வேளச்சேரி, தரமணி 100 அடி பிரதான சாலை டான்சி நகர் தனியார் மருத்துவமனை அருகே இரண்டு  பேர் வாக்கு இயந்திரங்களை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதை அந்த வழியாகச் சென்ற  பொதுமக்கள் சிலர் பார்த்து அவர்களை மடக்கி பிடித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், வாக்கு இயந்திரங்களை  எடுத்து சென்றவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என தெரியவந்தது.

 அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப்பை மறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி, போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  இதற்கிடையில், தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக  உதவி பொறியாளர் செந்தில்குமார், துப்புரவு மேஸ்திரி வேளாங்கண்ணி, துப்புரவு ஊழியர் சரவணன் ஆகியோரை சென்னை மாநகர கமிஷனர் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்து  உத்தரவிட்டார். சம்பவம் குறித்து வேளச்சேரி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசன் மவுலானா இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார்.  

இதனையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட மையம் 92ல் நாளை 17ம் தேதி மறுவாக்குப் பதிவு நடத்த  உத்தரவிட்டது.நேற்று ஒருநாள் மட்டும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டது.  இதையடுத்து, வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, அதிமுக வேட்பாளர் எம்கே அசோக், அமமுக வேட்பாளர் எம். சந்திரபோஸ், மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் சந்தோஷ் பாபு, நாம் தமிழர்  கட்சி வேட்பாளர் கீர்த்தனா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 23 வேட்பாளர்கள் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை  வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

வேளச்சேரி டிஏவி பள்ளி வளாகத்தில் மறுவாக்குப்பதிவு நாளை  நடக்க உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. வாக்குபதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள் முன்னி லையில் சரிபார் க்கப்பட்டு வாக்குபதிவு  மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.  இந்த வாக்குச்சாவடியில் 548 பேர் மட்டுமே வாக்களிக்க உள்ளனர். அவர்கள் அனைவருமே ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மறுதேர்தல் நடைபெறும் வேளச்சேரி டிஏவி பள்ளி வளாகத்தில் தேர்தல்  அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்கள். இந்நிலையில் வாக்குச்சாவடி  நுழைவுவாயில் மற்றும் அதன் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>