துவரங்குறிச்சி மாணவியின் கையில் குத்தி உடைந்த இரும்பு துண்டு ரத்த குழாய்க்குள் புகுந்தது வெற்றிகரமாக அகற்றிய அரசு டாக்டர்கள்

மணப்பாறை: துவரங்குறிச்சி அருகே விளையாடி கொண்டிருந்த மாணவியின் கையில் குத்தி உடைந்த இரும்பு துண்டு ரத்த குழாய்க்குள் புகுந்தது. இதை அரசு டாக்டர்கள் வெற்றிக்கரமாக அகற்றினர்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துலுக்கம்பட்டியை சேர்ந்த தொழிலாளி கனகராஜ். இவரது மூத்த மகள் சுவாதி (12). 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி மாலையில் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 3 எம்எம் தடிமன் கொண்ட கூர்மையான உருட்டு கம்பி இடது கையின் முழங்கை மூட்டின் சற்று கீழ் ஆழமாக குத்தியது. இது ஆழமாக உள்ளே சென்று ஒரு இன்ச்  நீளத்துக்கு உள்ளே உடைந்து விட்டது. இதனால் வலியில் துடித்த மகளை, பெற்றோர் தூக்கி கொண்டு ஒரு சில தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றனர்.

 

அங்கு டாக்டர்கள்  அதை எடுக்க முயற்சித்தபோது அந்த கம்பி துண்டு கையில் உள்ள  ரத்த குழாயுக்குள் புகுந்து ரத்த ஓட்டத்தால் இருதயத்தை நோக்கி நகர்ந்தது. இதனால் வரக்கூடிய ஆபத்தை உணர்ந்து ரத்த குழாய் அறுவை சிகிச்சை நிபுணரிடம் சுவாதியை சிகிச்சைக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். தங்களிடம் பணம் இல்லாததால் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சுவாதியை அவரது பெற்றோர் கடந்த 14ம் தேதி இரவு 9 மணிக்கு அழைத்து சென்றனர்.

அப்போது பணியில் இருந்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜான் விஸ்வநாத், சுவாதியை அறுவை சிகிச்சை அரங்குக்கு கொண்டு சென்று கம்பி குத்திய கை பகுதியை அறுவை சிகிச்சை மூலம் திறந்து ரத்த குழாய்க்குள் மாட்டியிருந்த கம்பி துண்டை வெற்றிக்கரமாக அகற்றினார். டாக்டர் விஸ்வநாத்துக்கு உதவியாக அறுவை சிகிச்சை செவிலியர் பிரபா, உதவியாளர்கள் கோமதி, பெரியசாமி செயல்பட்டனர். இதுகுறித்து டாக்டர் ஜான் விஸ்வநாத் கூறுகையில், சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு காலதாமதமின்றி கையில் உள்ள ரத்த குழாய்க்குள் புகுந்து நகர்ந்து கொண்டிருந்த இரும்பு கம்பி துண்டு அகற்றப்பட்டது.

தாமதம் ஏற்பட்டிருந்தால் சுவாதி இருதயத்துக்குள் சென்று மாட்டி கொண்டிருக்கும். ரத்த குழாயில் இரும்பு துண்டு இருக்கும்போதும், அதை எடுக்க முயற்சிக்கும்போதும் திடீரென நோயாளியின் இதய துடிப்பு சீரற்ற முறையில் விரைவாக துடித்து நிற்கும் ஆபத்து, கம்பி துண்டு இதயத்துக்கு சென்று விடும் ஆபத்து இருந்தும், துணிவுடன் நோயாளியின் நலன்கருதி செய்யபட்ட அவசர அறுவை சிகிச்சையின்போது எந்தவித ஆபத்தும் இல்லாமல் ஒரு மணி நேரத்துக்குள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சுவாதி நலமுடன் உள்ளார் என்றார்.

Related Stories: