நெடுஞ்சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்ட விவகாரம்: புத்திசாலி அரசு சர்ச்சையை இன்றிரவே முடிக்க வேண்டும்...ப.சிதம்பரம் டுவிட்.!!!

சென்னை: தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்ட நெடுஞ்சாலைகளின் பெயர்களில் எந்த மாற்றமும் கிடையாது என அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அருகில் இருந்து தொடங்கும் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு பகுத்தறிவு தந்தை பெரியாரின் பெயரை 1979ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் வைத்தார். அதிலிருந்து அந்த சாலை பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த சாலைக்கு கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றம் செய்து பெயர் பலகை வைக்கப்பட்டது.  

நெடுஞ்சாலை துறையின் இணையதளத்தில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல்வாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தி.க.தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் இந்த பெயர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை வெளியிட்டனர். தொடர்ந்து, நெடுஞ்சாலை துறையின் இணையதளத்தில் அண்ணா சாலையின்  பெயர் கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு என்றும் காமராஜர் சாலையின் பெயர் கிராண்ட் நார்தென் டிரங்க் ரோடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே,  சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வைத்துள்ள வெஸ்டர்ன் கிராண்ட் டிரங்க் சாலை என்ற பெயர் மீது பெரியார் ஈ.வே.ரா.சாலை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டள்ளது. கடும் எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், காமராஜர் சாலை, அண்ணா சாலையின் பெயர்களையும் மீண்டும் நெடுஞ்சாலை துறையின் பெயர் பலகைகளில் எழுத வேண்டும். அந்த துறையின் இணையதளத்திலும் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு புத்திசாலி அரசு என்ன செய்ய வேண்டும். தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்ட நெடுஞ்சாலைகளின் பெயர்களில் எந்த மாற்றமும் கிடையாது என்று உடனே அறிவிக்க வேண்டும். இந்தச் சர்ச்சையை இன்றிரவே முடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: