×

வெளிமாநில வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை குறைவு: விவசாயிகள் கவலை

வருசநாடு: வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் தேங்காய் விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கடமலைக்குண்டு, வருசநாடு, கண்டமனூர், குமணன்தொழு, மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், ஆண்டிபட்டி, சிங்கராஜபுரம், அம்பாசமுத்திரம், நாகலாபுரம், அய்யனார்புரம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும்  மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தேங்காய் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு  தேங்காய் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது. இதனால் தேங்காய் விலை குறைந்துள்ளது. தற்போது ஒரு தேங்காய் ரூ.12 முதல் 13 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வருசநாடு விவசாயி கருப்பசாமி கூறுகையில், ‘வெளிமாநில வரத்தால் தேங்காய் விலை  குறைந்துள்ளது. மேலும் தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவது மற்ற உப செலவுகள் அதிகம்.  தேங்காய் விலை குறைவால் பெரும்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே நிரந்தர விலை கிடைக்க  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்



Tags : Coconut prices fall due to increased imports: Farmers worried
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்