உத்தரப்பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10,000 அபராதம்....அம்மாநில முதல்வர் யோகி அதிரடி.!!!

லக்னோ: கொரோனா பரவலை தடுக்க உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உத்தரப்பிரதேசம் உட்பட 16 மாநிலங்களின் நிலைமை மோசமாகி வருகிறது. மேலும், 2வது நாளாக தினசரி பாதிப்பில் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் அபாயகரமான பரவல் காரணமாக தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் நிலைமை மோசமாகி வருகிறது.

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர், கர்நாடகா, மத்தியபிரதேசம், கேரளா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் 80 முதல் 82 சதவீத புதிய நோயாளிகள் கொரோனாவால் பாதிப்புக்கு ஆளாகின்றனர். தவிர, அரியானா, பஞ்சாப், தெலங்கானா, உத்தரகாண்ட், ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இரண்டாவது நாளாக ஒருநாள் பாதிப்பில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் புதியதாக பாதிக்கப்பட்டனர். கடந்த ஒன்பது நாட்களில், தினசரி நோயாளிகள் ஒன்று முதல் இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 22,000-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்து இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், முகக்கவசம் அணியாமல் முதல் முறை சிக்கினால் 1000 ரூபாய் அபராதமும், இரண்டாம் முறை சிக்கினால் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாநிலத்தில் 10 மாவட்டங்களில் இரவு 8 முதல் காலை 7 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: