சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரைக் கிளையில் சனிக்கிழமை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை: தலைமைப் பதிவாளர் அறிவிப்பு..!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வரும் சனிக்கிழமை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என்று தலைமைப் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேற்று காலை உயர் நீதிமன்றத்த்தில் வழக்கு விசாரணையின்போது, கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், கடந்த ஆண்டைவிட மோசமாக இருப்பதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசின் ஆலோசனைகளைத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் கோரியது.

தொடர்ந்து, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியைச் சந்தித்து சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது தமிழக அரசு எடுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும், நீதிமன்றங்களில் வழக்குக்காக வரும் மக்கள் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுக்கும்படி கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் ப.தனபால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

அதில், முக்கிய வழக்குகள் மற்றும் ஜாமீன் வழக்குகளில் மட்டும் அரசு வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜரானால் போதுமானது எனவும், உயர் நீதிமன்றத்தின் மற்ற அனைத்து வழக்குகளின் விசாரணையும் அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அறைகள் மற்றும் நூலகங்கள் ஏப்ரல் 17 முதல் மூடப்படும் எனவும், இந்த அறிவிப்பாணை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 23-ம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் எனவும், 22-ம் தேதி கொரோனா சூழல் குறித்து மீண்டும் ஆய்வு செய்து தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் நாட்டின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாகச் செயல்பட நீதிமன்றத்திற்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அரசின் கோரிக்கையை ஏற்று அதன் அடிப்படையில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலாகின்றன எனத் தலைமைப் பதிவாளர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: