மழையால் நெல்மூட்டைகள் வீணாவதை தடுக்கக்கோரி சேற்றில் புரண்டு விவசாயி நூதன போராட்டம்

செய்யாறு: மழையால் நெல் மூட்டைகள் வீணாவதை தடுக்க வலியுறுத்தி, செய்யாறில் சேற்றில் புரண்டு விவசாயி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று உழவர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், மழையால் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும். கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தர கட்டிடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் புதிய குடோன்களை அமைக்க வேண்டும்.

விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் வகையில் தார்பாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து, சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே மழையால் ஏற்பட்டிருந்த சேற்றில் விவசாயி ஒருவர் உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நூதன போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணசாமியிடம் அளித்தனர்.

Related Stories: