சன் நியூஸ் செய்தி எதிரொலி!: சேலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடக்கம்..!!

சேலம்: சேலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக புகார் கூறப்பட்ட நிலையில், சன் நியூஸ் செய்தி எதிரொலியாக தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றின் 2ம் கட்ட அலையானது தமிழகத்தில் அதிவேகமாகவே பரவி வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசானது அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசிகள் இருக்கின்றன என கூறப்பட்டது.

சேலம் மாவட்டம் குமாரசாமிபட்டியிலுள்ள சேலம் நகர்ப்புற சுகாதார ஆரம்ப நிலையத்தில் தடுப்பூசி கடந்த ஒருவாரமாக போடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக வந்தபோது தடுப்பூசி கையிருப்பு இல்லை என எனக்கூறி அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் திங்கட்கிழமை வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பான செய்தி சன் நியூஸ் நேரலை மூலமாக ஒளிபரப்பப்பட்டது. இதன் எதிரொலியாக செய்தி வெளியிடப்பட்ட 1 மணி நேரத்திலேயே நகர்ப்புற சுகாதார ஆரம்ப நிலையத்தின் கதவுகள் திறக்கப்பட்டு தற்போது தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அதிகாரியிடம் கேட்டபோது, 5 ஆயிரம் தடுப்பூசிகள் நேற்றிரவு வந்தது. தடுப்பூசி தற்போது பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. இங்குள்ள அனைவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார். இன்று காலை முதல் சேலத்தில் உள்ள குமாரசாமிபட்டி, ரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி இல்லாமல், பல்வேறு இடங்களில் இருந்து வந்த முதியோர்கள் பலர் திரும்பி சென்ற நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்கின்றனர்.

Related Stories: