வேலூரில் இடி, மின்னலுடன் 2 மணி நேரம் பெய்தது..! கோடையில் கொட்டிய மழையால் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 500 நெல் மூட்டைகள் நனைந்தன

வேலூர்: வேலூரில் நேற்று அதிகாலை இடி, மின்னலுடன் 2 மணி நேரம் கோடை மழை கொட்டி தீர்த்தது. இதனால் கோயிலுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வைத்திருந்த 500 ெநல் மூட்டைகள் நனைந்தது. வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வந்தது. கடந்த மார்ச் 31ம் தேதி 106.7 டிகிரியும், ஏப்ரல் 1ம் தேதி 109.2 டிகிரியும் வெயில் பதிவானது. இந்தாண்டின் இதுவரை அதிகபட்சமாக ஏப்ரல் 2ம் தேதி 110.1 டிகிரி வெயில் பதிவானது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக 100 டிகிரிக்கு குறைவாக வெயில் பதிவாகி வருவது பொதுமக்களை சற்றே ஆறுதல்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், வளிமண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி, வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை 4 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வேலூர் கொசப்பேட்டையில் உள்ள சோளாபுரியம்மன் கோயிலுக்குள் மழைவெள்ளம் புகுந்தது. அதேபோல் வேலூர் டோல்கேட் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திறந்தவெளியில் வைத்திருந்த 500 நெல் மூட்டைகள் திடீரென பெய்த மழையால் நனைந்தது.

மேலும், கொரோனா பரவல் காரணமாக பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்ட உழவர்சந்தையில் மழைநீர் குளம்போல் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மாங்காய் மண்டி அருகே அமைக்கப்பட்டு வரும் தற்காலிக மார்க்கெட்டில் மழைநீர் தேங்கியது. வேலூர் கோட்டை நுழைவுவாயிலின் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணிகளால், மழைநீர் வெளியேற முடியாமல்  தேங்கியது. கோடை வெயிலால் தகித்த வேலூர் மக்கள் திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில் தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்தது. அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதிகளில் பலத்த மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. மழையால் சில இடங்களில் மின்ஒயர் அறுந்து மின்சாரம் தடைபட்டது. விளைநிலங்களில் அறுவடைக்கு தயாரான பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமானது.

Related Stories: