சேலத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் பொதுமக்கள்

சேலம்: சேலத்தில் தடுப்பூசி போட வந்த பொதுமக்களுக்கு கையிருப்பு இல்லை என கூறி திருப்பி அனுப்பி வருவதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கொரோனா தாக்கத்தின் 2வது அலை அதிவேகமாக தமிழகத்தில் பரவி வருகிறது. ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட கூடிய சூழல் உள்ளது. சென்னையை பொறுத்தவரை இந்த தாக்கம் அதிகளவில் உள்ளது.

சேலம் மாவட்டத்திலும் கொரோனா தாக்கத்தின் வீரியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை பொறுத்தவரை 195 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 281 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. குமாரசாமிபட்டியிலுள்ள சேலம் நகர்ப்புற சுகாதார ஆரம்ப நிலையத்தில் தடுப்பூசி கடந்த ஒருவாரமாக போடப்பட்டு வருகிறது.

ஆனால் இன்று ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக வந்த நிலையில் அவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்ப கூடிய நிலை தான் உள்ளது. இங்கு தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லை. திங்கட்கிழமை வாருங்கள என திருப்பி அனுப்பப்படும் நிலை உள்ளது. சுகாதாரத்துறையை பொறுத்தவரை சேலம் மாவட்டத்திற்கு 2 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. எனவே கையிருப்பு இல்லை என்ற நிலை இல்லை. போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: