மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்!: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..!!

டன்னா: இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் மரணத்திற்கு உலக நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிலிப்பை கடவுளாக வணங்கி வருகின்றனர் குறிப்பிட்ட பழங்குடியின மக்கள்.  தெற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவின் பெயர் தான் டன்னா. இந்த தீவில் வசித்து வரும் பழங்குடியினர்கள் தங்களின் தெய்வமாக வழிபடுவது மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை தான். 10,000 மைல் தொலைவில் இருக்கும் இங்கிலாந்திற்கும் டன்னா பழங்குடியினருக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் 47 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும். 1974ம் ஆண்டு வரை பிரஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த டன்னா தீவின் சுதந்திரத்திற்கு முதன்முறையாக குரல் கொடுத்தது பிரிட்டிஷ் இளவரசர் பிலிப். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் தீவின் விடுதலை மீதான அவரது ஆர்வம் தளரவில்லை.

பின்னர் 1980ம் ஆண்டு டன்னா தீவுக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்ட நிலையில், பழங்குடியினர்கள் மனதில் இளவரசர் பிலிப் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்.  டன்னா தீவுக்கு ஒருமுறை கூட இளவரசர் பிலிப் சுற்றுப்பயணம் செய்தது கிடையாது. ஆனால் அவர் இருந்த இடத்தில் இருந்தே இந்த பயன்குடியின மக்களுக்கு தன் அன்பை பொருட்களின் ஊடாகவும், புகைப்படங்களின் வழியாகவும் பரிமாறிக்கொண்டார். அவ்வாறு இளவரசர் பிலிப் அனுப்பிய அவரது புகைப்படம் ஒவ்வொருவரின் குடிசையிலும் தெய்வத்தின் உருவப்படமாக மாறி இருக்கிறது. 2007ம் ஆண்டு தனியார் சேனல் ஒன்றின் வழியாக இங்கிலாந்திற்கு அழைத்து வரப்பட்ட டன்னா பழங்குடியின குழு, இளவரசர் பிலிப்பை நேரில் கண்டு புகைப்படம் எடுத்து அவருடன் விருந்தும் உண்டனர்.

இதன் பிறகு டன்னா தீவு மக்கள் கொண்டாடும் தலைவனாகவே இளவரசர் பிலிப் மாறிவிட்டார். கடந்த 9ம் தேதி இங்கிலாந்து இளவரசரின் மரண செய்தி அறிந்த டன்னா பழங்குடியினர், வருத்தத்தில் மூழ்கினர். இளவரசரின் புகைப்படத்தையும் இங்கிலாந்து தேசிய கொடியையும் வைத்து இறுதி மரியாதை செலுத்திய பழங்குடியினர்கள் அரச குடும்பத்திற்கு தங்களது இறங்களையும் தெரிவித்து கொண்டுள்ளனர். சனிக்கிழமை செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அரச குடும்பத்தினர்கள் முன்னிலையில் இளவரசர் பிலிப்பிற்கு இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. ஆனால் மடிந்த தங்களின் தெய்வம் மீண்டும் எழுந்து வரும் என்பதே டன்னா தீவு பழங்குடியினர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Related Stories: