கொரோனா வேகமாக பரவி வரும் நெருக்கமான சூழ்நிலையில் தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது..!

சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு கொரோனா கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்கியது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அதன் பின்னர்நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து, நேரடி வகுப்புகள் தொடங்குவது பற்றி கல்வித்துறை ஆலோசித்தது. அதன்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கும், கடந்த பிப்ரவரி மாதத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், பள்ளிகளில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் 9-ம் வகுப்புக்கு ஆண்டு இறுதித்தேர்வும், 10 மற்றும் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனால் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தேர்வு ரத்து செய்யப்படும் என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில், மே 2-ந்தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

அதற்கு மறுநாள்  பிளஸ் -2 பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால், அன்றைய நாளில் நடைபெற இருந்த தேர்வு தேதி மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற தேர்வுகள் திட்டமிட்டபடி அதே நாட்களில் நடக்க இருப்பதாகவும் அரசு தேர்வுத் துறை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு கொரோனா கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக நான்கு குழுக்களாக மாணவர்களை பிரித்து தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, கடும் கட்டுப்பாடுகளுடன் செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள மாணவர்களுக்கு வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்த வேண்டும் என்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>