தமிழகத்தில் தீவிர நிலையில் பரவும் கொரோனா: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்கவேண்டும்..! எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்கவேண்டும் என்று எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரேநாளில் 7,987கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த சூழலில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி சார்பில் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் ,தோட்டக்கலை உதவி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வுகளை அறிவித்துள்ளது. வரும் 17 18 மற்றும் 19ஆம் தேதி ஏழு மாவட்டங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ள தேர்வாணையம் அதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.தேர்வு அறைக்குள் அலைபேசியை கொண்டு செல்ல அனுமதி இல்லை , அலைபேசி உள்ளிட்ட பொருட்களை மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்க வேண்டும்.

கருப்பு நிற மை முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுள்ள அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் எம்.பி.ரவிக்குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா பரவும்போது தேர்வு நடத்துவதா? உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கு எதிர்வரும் 17,18 மற்றும் 19 ஆம் தேதிகளில் டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படவுள்ள எழுத்துத் தேர்வுகளை ஒத்திவைக்கவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>